பூந்தமல்லி, கொரட்டூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் கலெக்டரிடம் ஒப்படைப்பு


பூந்தமல்லி, கொரட்டூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் கலெக்டரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 1 March 2019 4:15 AM IST (Updated: 28 Feb 2019 11:47 PM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி மற்றும் கொரட்டூரில் தி.மு.க. சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

திருவள்ளூர்,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களின் குறைகளை தீர்க்க ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் பல்வேறு இடங்களுக்கு சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் கொரட்டூர் மற்றும் பூந்தமல்லி பகுதியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அந்த மனுக்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பூந்தமல்லி தொகுதியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவரும், சென்னை வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான வாகை சந்திரசேகர் ஆய்வறிக்கை தயாரித்தார்.

கலெக்டரிடம் ஒப்படைப்பு

அந்த அறிக்கை மற்றும் கிராம சபை கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் வாகை சந்திரசேகர் ஒப்படைத்தார். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அப்போது திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவடி சா.மு.நாசர், மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், திருவள்ளூர் நகரச்செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் கொத்தியம்பாக்கம் தேசிங்கு, காக்களூர் ஜெயசீலன், புஜ்ஜி ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர்கள் மூர்த்தி, பி.கே.நாகராஜ் மற்றும் திரளான தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story