பொன்னேரி அருகே மதுக்கடை திறக்கப்பட்டதை கண்டித்து சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு


பொன்னேரி அருகே மதுக்கடை திறக்கப்பட்டதை கண்டித்து சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 1 March 2019 4:00 AM IST (Updated: 28 Feb 2019 11:55 PM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொன்னேரி,

பொன்னேரி அடுத்த சின்னகாவனம் கிராமத்தில் பெரும்பேடு செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பகுதியில் கோவில், பள்ளிக்கூடம், கடைவீதி ஆகியவை உள்ளன. இதனால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் கடை வைக்கக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் இதனை மீறி கடந்த வாரம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

இதற்கு அந்தப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள், பல்வேறு கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், மகளிர் குழுவினர் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் சின்னகாவனம் பஸ் நிலையத்தில் நேற்று ஒன்று கூடினர். பின்னர் அனைவரும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதனையடுத்து கடையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொன்னேரி ஆர்.டி.ஓ.விடம் நேரில் மனு கொடுக்க முடிவு செய்தனர். இந்தநிலையில் திடீரென அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்தன.

தகவல் அறிந்த பொன்னேரி தனி தாசில்தார் சங்கிலிரதி, இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று, டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாரும், வருவாய்த்துறையினரும் உறுதி அளித்தனர். உடனே அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலைமறியல் காரணமாக சின்னகாவனம்-பெரும்பேடு சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story