பயிர்களில் படைப்புழு தாக்குதல்: தேர்தலுக்கு முன்பாக நிவாரணம் வழங்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


பயிர்களில் படைப்புழு தாக்குதல்: தேர்தலுக்கு முன்பாக நிவாரணம் வழங்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Feb 2019 11:00 PM GMT (Updated: 28 Feb 2019 7:38 PM GMT)

தேர்தலுக்கு முன்பாக பயிர்களில் படைப்புழு தாக்குதலுக்கு உள்ளான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் பேசுகையில், கோடை காலம் தொடங்க உள்ளதால் கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்கிட வேண்டும். பருத்திக்கான கொள்முதல் விலை குறைந்து வருவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே அரசு நிர்ணயித்துள்ள விலையை வழங்கிட வேண்டும். ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கோடைகால பயிற்சி அளிக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு பாமாயில் மர சாகுபடியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் முருகேசன் பேசுகையில், தரமற்ற, போலி விதைகளால் விவசாயிகள் ஆண்டுதோறும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், பெரம்பலூரில் விதை உற்பத்தி மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நீலகண்டன் பேசுகையில், படைப்புழு தாக்குதலுக்குள்ளான மக்காச்சோள பயிரினை பயிரிட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கையை தெரியப்படுத்த வேண்டும். இதற்கு நிவாரணம் வழங்கு வதற்காக மாவட்ட நிர்வாகத்தால் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அரசுக்கு அனுப்பியதாக மாவட்ட நிர்வாகத்தால் கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தி, மக்காச்சோளம் அறுவடை காலம் தொடங்கி கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளிடம் வியாபாரிகள் எடை மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க தொழிலாளர் நலத்துறையினர் அவ்வப்போது கள ஆய்வுசெய்து, மோசடியில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். 2015-16-ம் ஆண்டில் எறையூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் ராஜேந்திரன் பேசுகையில்,

கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே, பெரம்பலூர் மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால், நிகழாண்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளிலும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதை அகற்ற வேண்டும். பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து, வங்கியில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் ரத்து செய்யவேண்டும் என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை பேசுகையில்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வனச்சரகத்தில் விவசாயிகளின் பட்டா நிலங்களில் மரக்கன்றுகள் நடப்படும் திட்டத்தில் 2018-19-ம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளன. நடவு செய்ய ஒரு மரக்கன்றுக்கு ரூ.16 வீதம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல, வழங்கப்படும் மரக்கன்றுகளை கொண்டு செல்வதற்கும், தூரத்திற்கு ஏற்ப பணம் வழங்கப்படுகிறது. இந்த தொகை பெரம்பலூர் மாவட்டத்தில் யாருக்கும் வழங்கப்படவில்லை. இதன்மூலம் பல லட்ச ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக, உரிய விசாரணை மேற்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை பெற்றுத்தர வேண்டும் என்றார்.

பெரம்பலூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் மற்றும் கரும்பு வளர்ப்போர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் பேசுகையில், பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 10 ஆண்டுகளாக ரூ.96 கோடியே 14 லட்சத்தில் இணை மின்சாரம் மற்றும் ரூ.42 கோடியே 72 லட்சத்தில் நவீன ஆலையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை விரைவில் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்றார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் விவசாயிகள் பலர் பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வேளாண்மை இணை இயக்குனர் இளவரசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை துறை) கலைவாணி, வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) சந்தானகிருஷ்ணன் மற்றும் மாவட்ட அளவிலான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story