கொடைக்கானலில், உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்


கொடைக்கானலில், உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 March 2019 4:15 AM IST (Updated: 1 March 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் உரக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொடைக்கானல்,

கொடைக்கானல் நகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நகராட்சி பகுதியில் 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உரக்கிடங்குகள் அமைக்கும் பணி நடந்தது. ஆனால் இந்த உரக்கிடங்குகள் அமைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கொடைக் கானல் நகரை அடுத்த செண்பகனூர் பகுதியில் உரக்கிடங்கு அமைப்பதற்கு கொடைக் கானல் நகராட்சி இடத்தை தேர்வு செய்து, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பணியை தொடங்கியது. இதற்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினர்.

இருப்பினும் தொடர்ந்து உரக்கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உரக்கிடங்கு அமைக்கக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 500-க் கும் மேற்பட்டோர் கொடைக் கானல்-வத்தலக்குண்டு சாலையில் செண்பகனூர் பிரிவில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங் களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மறியலில் ஈடுபடக்கூடாது என்றும், மறியலை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் பொதுமக்கள் மறியலை கைவிடவில்லை. இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையே தகவல் அறிந்து வந்த தாசில்தார் ரமேஷ், நகராட்சி ஆணையாளர் முருகேசன், போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி, முன்னாள் நகரசபை தலைவர்கள் முகமது இபுராகிம், கோவிந்தன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரக்கிடங்கு அமைக்கும் பணியை கைவிடுவதாக நகராட்சி ஆணையாளர் உறுதி கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே போக்குவரத்துக்கு இடையூறாக மறியல் செய்ததாக பங்குத்தந்தை ஏஞ்சல்ராஜ், ஜான்பிரிட்டோ, செல்லத்துரை, ஜான்சன் மற்றும் செண்பகனூர் பகுதியை சேர்ந்த 16 பெண்கள் உள்பட 29 பேர் மீது கொடைக் கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கொடைக் கானலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story