மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், ராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியலுக்கு பயன்படுத்துகிறார் மோடி


மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், ராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியலுக்கு பயன்படுத்துகிறார் மோடி
x
தினத்தந்தி 1 March 2019 4:30 AM IST (Updated: 1 March 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

ராணுவ வீரர்களின் தியாகத்தை அரசியலுக்கு மோடி பயன்படுத்து கிறார் என்று கோவையில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் குற்றம் சாட்டினார்.

கோவை,

கோவை மாநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் தேர்தல் ஆலோசனை கூட்டம் ஆர்.எஸ்.புரம் புரந்தரதாசர் கலையரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கோவை வடக்கு மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமை தாங்கி பேசினார்.

மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மண்டல பொறுப்பாளர் மோகன்குமார மங்கலம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் பேசிய தாவது:-

நாடு இக்கட்டான சூழலில் இருக்கும்போது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அரசுக்கு ஆதரவாகவே எப்போதும் இருந்துள்ளார். புலவாமாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் தாக்கப்பட்டபோது அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் ராகுல்காந்தி. ஆனால் நரேந்திரமோடி அப்போது போட்டோ ஷூட்டிங்கில் இருந்தார்.

வீரர்களின் உடல்களை டெல்லி கொண்டுவந்தபோது முதலில் வந்து அஞ்சலி செலுத்தியவர் ராகுல்காந்தி. ஆனால் நரேந்திரமோடி 3½ மணி நேரம் தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தினார். அதற்கு காரணம் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டது தான். தீவிரவாதத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை போன்று வேறு எந்த கட்சியும் குரல் கொடுத்ததில்லை. இதற்கு காரணம் முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் தீவிரவாதத்தினால் தான் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.

இந்திய எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை ராகுல்காந்தி தள்ளி வைத்துள்ளார். ஆனால் நரேந்திரமோடி புதிய செயலி அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ராணுவ வீரர்களின் தியாகத்தை நரேந்திரமோடி அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துகிறார். இது கண்டனத்துக்குரியது. இந்த பிரச்சினையின் மூலம் நரேந்திரமோடி மக்களை திசை திருப்ப பார்க்கிறார்.

புலவாமா தாக்குதலினால் மோடி அரசு தோற்றுப்போனதற்கு அவர் பொறுப்பு ஏற்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி நடத்தி வந்த பா.ஜனதா அரசுக்கு முடிவு கட்டுவதற்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.

எனவே பா.ஜனதா அரசின் அவலங்களை மக்களிடம் எடுத்துச்சொல்லி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை வெற்றி பெறச்செய்ய வேண்டும். உங்கள் தொகுதியில் யார் நிற்கிறார்கள் என்று பார்க்காதீர்கள். காங்கிரஸ் கட்சி கூட்டணி சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களின் வெற்றிக்காக பாடுபடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என்.கந்தசாமி, கோவை தெற்கு தொகுதி பொறுப்பாளர் பி.எஸ்.சரவணக்குமார், தெற்கு மாவட்ட தலைவர் எம்.பி.சக்திவேல், மாநில பொதுச்செயலாளர் வீனஸ்மணி, சவுந்தரகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் கே.எஸ்.மகேஷ்குமார், கணபதி சிவக்குமார், விஜயகுமார், விஜய் இளஞ்செழியன், கோவை செல்வன், கே.பி.செல்வராஜ், இருகூர் சுப்பிரமணியன், வடவள்ளி காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக புலவாமா தாக்குதலுக்கு கூட்டத்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Story