புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், கஜா புயலால் பாதிக்கப்பட்டது. இந்த புயலில் கோவிலூர் ஊராட்சியில் உள்ள, கோவிலூர், மேலக்கோட்டை, கச்சிராம்பட்டி, சம்பா மனை, தெற்கு மேலக்கோட்டை, மெய்க்கேல் பட்டி பகுதி மக்களும் பாதிக்கப்பட்டன. குடிசை, ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. தென்னை, பலா போன்ற பல வகை மரங்களும் சாய்ந்தன. இதனால் பொதுமக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து தவித்து வந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில், நிவாரண பொருட்கள், நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
கோவிலூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் பலருக்கு நிவாரண பொருட்களோ, நிவாரண தொகையோ வழங்கப்படவில்லை. குறிப்பாக மெய்க்கேல் பட்டி கிராமத்தில் யாருக்குமே வழங்கவில்லை. நிவாரணம் முறையாக வழங்கப்பட வேண்டும் என கோவிலூர் ஊராட்சி பொதுமக்கள் ஆலங்குடி தாசில்தார் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு பல மனுக்கள் அனுப்பியுள்ளனர். இதையடுத்து நிவாரணம் கேட்டு கோவிலூர் ஊராட்சி பொதுமக்கள் 4 முறை சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வரும் அதிகாரிகள் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து கலைந்து சென்றனர். ஆனால் இது நாள் வரைக்கு எந்த பொருட்களும் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கோவிலூர் ஊராட்சி பொதுமக்கள் நிவாரணம் வழங்காததை கண்டித்து நேற்று காலை புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையில் கற்கள், தகரத்தை வைத்து மறியலில் ஈடு பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், ஒவ்வொரு தடவையும் நிவாரணத்திற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறுகிறீர்கள். ஆனால் அரசு தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை என்று கூறி சாலை மறியலை கைவிட மறுத்தனர். பின்னர் தாசில்தாரிடம் கூறி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story