பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: புதுக்கோட்டையில் 21,096 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்
புதுக்கோட்டையில் இன்று பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. தேர்வை 21,096 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட் டத்தில் இன்று (வெள்ளிக் கிழமை) பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 508 மாணவர்கள், 4 ஆயிரத்து 506 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 14 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுத உள்ளனர். இதைப்போல அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 370 மாணவர்கள், 3 ஆயிரத்து 631 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 1 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.
இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 640 மாணவர்கள், 3 ஆயிரத்து 158 மாணவிகள் என மொத்தம் 5 ஆயிரத்து 798 பேர் எழுத உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 கல்வி மாவட்டங்களையும் சேர்த்து 21,096 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுத உள்ளனர். இதில் 283 பேர் தனித்தேர்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 27 தேர்வு மையங்கள், புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 33 தேர்வு மையங்கள், இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 21 என மொத்தம் 81 தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுத உள்ளனர். தேர்வு இன்று தமிழ் முதல் தாளுடன் தொடங்கி வருகிற 19-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 12.45 மணி வரை நடைபெறும். தனித்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு காலை 10 மணி முதல் 1.15 மணி வரை நடைபெறும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை முன்னிட்டு தேர்வு நடை பெறும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் தேர்வு மையங்களில் குடிநீர் வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. மாணவ, மாணவிகள் செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் உள்ளிட்டவற்றை கொண்டு வருவதற்கும், தேர்வு முடிந்ததும் விடைத்தாளை கொண்டு செல்லவும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு தேர்வு மைய நுழைவு வாயிலிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், ஆள் மாறாட்டம் செய்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story