பாலீஷ் செய்து தருவதாக கூறி, பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு பீகார் வாலிபர்கள் கைது
பாலீஸ் செய்து தருவதாக கூறி பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற பீகாரை சேர்ந்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
குடவாசல்,
குடவாசல் அருகே உள்ள செருகளத்தூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி கவிதா (வயது 37). இவர் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது 2 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் சூட்கேசுடன் இறங்கினர். அப்போது அவர்கள் நகைகளுக்கு பாலீஷ் செய்து தருகிறோம் என்று கவிதாவிடம் கூறியுள்ளனர். இதனை நம்பி அவர் காலில் கிடந்த வெள்ளி கொலுசை கழட்டி பாலீஷ் செய்ய சொல்லியுள்ளார். அதனை பாலீஷ் போட்டு கொடுத்து விட்டு வேறு ஏதாவது கொடுங்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
பாலீஷ் வேலை நன்றாக இருந்ததால் கவிதா கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை கொடுத்து பாலீஷ் போட சொல்லியுள்ளார். அப்போது தங்க சங்கிலியை பெற்ற மர்மநபர்கள் ஏதோ பசையை கவிதாவின் கையில் தடவினர். பின்னர் மஞ்சள் தூளை தண்ணீரில் கரைத்து சங்கிலியை அதில் போட்டு பாலீஷ் செய்தபோது கவிதா மயக்கம் அடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனை பயன்படுத்தி அவர்கள் 3 பவுன் சங்கிலியை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து கவிதா குடவாசல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடினர். அப்போது குடவாசல் சோதனை சாவடி அருகில் மோட்டார் சைக்கிளில் 2 பேர் சூட்கேசுடன் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், பீகார் மாநிலத்தை சேர்ந்த சியாம்லால்ஷா மகன் கிஷான்லால் (34), ரஞ்சித்பிரசாத் மகன் மணிஸ்குமார் (30) என்பதும், அவர்கள் பாலீஸ் செய்து தருவதாக கூறி பெண்களிடம் தங்க சங்கிலியை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து குடவாசல் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story