கரூர் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி உறவினர்கள் மறியல்- பஸ் சிறைபிடிப்பு


கரூர் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி உறவினர்கள் மறியல்- பஸ் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 1 March 2019 4:30 AM IST (Updated: 1 March 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பரிதாபமாக இறந்தார். அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டு, பஸ்சை சிறைபிடித்தனர்.

கரூர், 

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள வள்ளியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 55). விவசாயி. இவர் நேற்று காலை வழக்கம் போல் வீட்டின் அருகே உள்ள பொது குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடித்து குளித்தார். பின்னர் அங்கிருந்து நடந்து வந்த போது கைத்தாங்கலுக்காக அங்கிருந்த கம்பிவேலியை நாகராஜன் பிடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையறிந்த பொதுமக்கள் பதறி அடித்து கொண்டு ஓடி வந்தனர். பின்னர் மின்வாரிய அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். அவர்கள் மின் இணைப்பை துண்டித்து ஆய்வு செய்த போதும் கூட, அந்த கம்பிவேலியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது தெரிய வந்தது.

பின்னர் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு, நாகராஜன் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் போலீசார், நாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு கரூர் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடம் முன்பு நாகராஜனின் உறவினர்கள் திரண்டனர்.

அப்போது, வள்ளியப்பம் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கோழிப்பண்ணைக்கு சென்ற மின்சார வயர்களில் இருந்து கசிந்த மின்சாரமே அந்த கம்பி வேலியில் பாய்ந்திருக்கிறது. இதனை அறியாமல் தான் நாகராஜன் அதனை பிடித்ததும் இறந்து விட்டார். எனவே அஜாக்கிரதையாக கோழிப்பண்ணைக்கு செல்லும் மின்சார வயர்களை பராமரிக்க விட்டதன் விளைவு ஒரு உயிரை பறிகொடுக்க நேர்ந்துவிட்டது.

எனவே கோழிப்பண்ணை உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி அந்த பகுதியிலுள்ள வடக்கு பிரதட்சணம் சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் உடன்படாமல் மறியலை தொடர்ந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே அந்த கோழிப்பண்ணை உரிமையாளருடையது என கூறி அவ்வழியாக வந்த ஒரு தனியார் பஸ் சிறைபிடிக்கப்பட்டது. இதனால் டிரைவர் அந்த பஸ்சை ஓரமாக நிறுத்தினார்.இதையடுத்து பயணிகள் கீழே இறங்கி, கரூர் பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று மாற்று பஸ்சை பிடித்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.

இந்நிலையில் மறியல் நடப்பதை அறிந்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், பிச்சையா ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் மறியல் செய்தவர்களை அமைச்சர் அழைத்து பேசினார். அப்போது, இந்த மின் விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மின்சாரம் பாய்ந்து இறந்து போன நாகராஜன் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வழிவகை செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.அதன்பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story