விதவையை காதலித்து திருமணம் செய்த கல்லூரி மாணவர் கொலையில் 2 பேர் கைது


விதவையை காதலித்து திருமணம் செய்த கல்லூரி மாணவர் கொலையில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Feb 2019 10:45 PM GMT (Updated: 28 Feb 2019 8:47 PM GMT)

உசிலம்பட்டி அருகே விதவையை காதலித்து திருமணம் செய்த கல்லூரி மாணவர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

உசிலம்பட்டி, 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வலையபட்டி. இந்த ஊரைச் சேர்ந்த குமார்-செல்வராணி தம்பதியினரின் மகன் யுகேஷ் (வயது 21). செல்வராணி கருமாத்தூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர்கள் கருமாத்தூரில் வசித்தனர்.

யுகேஷ் உசிலம்பட்டி அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். யுகேசுக்கும், போத்தம்பட்டியை சேர்ந்த விதவையான இந்திரா (31) என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்திராவுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவரை யுகேஷ் திருமணம் செய்துகொண்டார்.

இதற்கிடையே இந்திராவின் முதல் கணவரின் தம்பி ராம்பிரபு உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில், தனது அண்ணன் மனைவியை குழந்தைகளுடன் காணவில்லை என்று புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யுகேசை கொடூரமாக கொலை செய்து, கருமாத்தூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு உடலை வீசிவிட்டு ஒரு கும்பல் தப்பிச் சென்றனர். இதுகுறித்து செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கல்லூரி மாணவரை கொன்ற வழக்கில் வலையபட்டியை சேர்ந்த கோபி மகன் ஜெயபிரகாஷ் (32), மாமரத்துப்பட்டியை சேர்ந்த ரவி மகன் முத்துப்பாண்டி (32) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ஜெயபிரகாஷ், முத்துப்பாண்டியை போலீசார் கைதுசெய்தனர்.

பிடிபட்ட நபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், யுகேசும், காதல் மனைவியான இந்திராவும் நேற்று முன்தினம் தேனியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினர். இந்த தகவல் முதல் கணவரின் தம்பியான ராம்பிரபுவிற்கு தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ராம்பிரபு மற்றும் சிலர் அடங்கிய கும்பல் தேனியில் உள்ள லாட்ஜூக்கு சென்று 2 பேரையும் பிடிக்க முயன்றுள்ளது. அப்போது அவர்களது பிடியில் யுகேஷ் சிக்கினார். இந்திரா தப்பிச் சென்றார். இதனையடுத்து அந்த கும்பல் யுகேசை காரில் ஏற்றிக்கொண்டு சென்று சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் யுகேஷ் உடலை, அவரது வீட்டின் முன்பு வீசிவிட்டு அந்த கும்பல் தப்பியோடியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே அந்த கும்பலிடம் இருந்து தப்பிய இந்திரா, தனது காதல் கணவரை சிலர் கடத்திச் சென்றுவிட்டதாக தேனியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

கல்லூரி மாணவர் கொலை வழக்கில் தொடர்புடைய ராம்பிரபு மற்றும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story