வால்காட்டுபுதூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு


வால்காட்டுபுதூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2019 10:00 PM GMT (Updated: 28 Feb 2019 8:59 PM GMT)

வால்காட்டுபுதூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெள்ளியணை, 

கரூர் மாவட்டம், தாந்தோன்றி ஒன்றியம், மூக்கணாங்குறிச்சி ஊராட்சி வால்காட்டுபுதூரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து குடிநீர் எடுத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நிரப்பி அங்குள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. அந்த பணியின்போது ஆழ்துளை கிணற்றிலிருந்து மேல்நிலை நீர்தேக்கதொட்டிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்வது பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை வால்காட்டு புதூர் பஸ் நிறுத்தத்தில் திரண்டனர். பின்னர் கரூர்-ஈசநத்தம் செல்லும் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், தாந்தோன்றி வட்டார வளர்ச்சி அதிகாரி பாலசந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடைந்த குழாயை மாற்றி புதிய குழாய் பதிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தற்காலிகமாக லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் கரூர்-ஈசநத்தம் பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story