இடமாறுதல் செய்வதை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு


இடமாறுதல் செய்வதை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு
x
தினத்தந்தி 1 March 2019 4:15 AM IST (Updated: 1 March 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

இடமாறுதல் செய்வதை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த மாறுதலை ரத்து செய்யாவிட்டால் தேர்தல் பணிகளை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

சிவகங்கை, 

தமிழகம் முழுவதும் வட்ட பொறுப்பு வகிக்கும் வட்டாட்சியர்களை திடீரென மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்து வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார். இதைக் கண்டித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று தங்களது பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆனந்த பூபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழரசன் விளக்கவுரையாற்றினர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது:- தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மேற்கொள் காட்டி வருவாய் நிர்வாக ஆணையர் தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையில் பணியாற்றும் 270 வட்டாட்சியர்களை திடீரென்று நேற்று முன்தினம் இரவு மாவட்ட மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றும் 7 வட்டாட்சியர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் வட்டாட்சியர்கள் சிவகங்கை மாவட்டத்திற்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தேர்தல் பணிகள் கடும் பாதிப்பிற்கும் உள்ளாகும். மேலும் வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர் முதல் வட்டாட்சியர் வரையில் உள்ள அலுவலர்கள் மாவட்ட எல்லைக்குள் பணியாற்றி வருகின்றனர்.

இதனால் அவர்கள் உள்ளூரில் உள்ள கிராமங்கள், வாக்குச்சாவடிகள் குறித்து நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். அத்துடன் அவர்கள் உள்ளூர் மக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பகுதியினர் குறித்து நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். இந்நிலையில் அவர்களை திடீரென்று புதிய மாவட்டத்தில் பணியாற்ற உத்தரவிடும்போது, அவர்கள் அந்த பகுதி குறித்து எவ்வித அறிமுகம் இல்லாமல் தேர்தல் காலத்தில் ஏற்படும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளை எதிர்கொள்வதில் கடும் சிக்கலை சந்திப்பார்கள்.

அத்துடன் தேர்தல் காலங்களில் ஏற்படும் செலவுகளை வட்டாட்சியர்களே மேற்கொள்வர். இதற்கான நிதி ஒதுக்கீடு தேர்தல் ஆணையத்தால் தேர்தல் முடிந்து பல மாதங்களுக்கு பின்னர் தான் வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட மாறுதல் செய்வதால், புதிதாக பொறுப்பேற்கும் வட்டாட்சியர்கள் தேர்தல் செலவினங்களை செய்தால் அதனை திரும்ப பெறுவதில் நிர்வாக சிக்கல்கள் ஏற்படும். இதனால் தேர்தல் செலவுகளை யார் செய்வது என்றும், எவ்வாறு தேர்தல் பணிகள் நடைபெறும் என்கிற கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் தான் பதில் கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story