சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது: 40,068 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள் பதற்றம் இல்லாமல் எழுத, முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி அறிவுரை
இன்று தொடங்கும் பிளஸ்-2 தேர்வை, சேலம் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 68 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். பதற்றம் இல்லாமல் மாணவர்கள் தேர்வை எழுத மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி அறிவுரை வழங்கி உள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மாவட்டத்தில் 18 ஆயிரத்து 734 மாணவர்கள், 21 ஆயிரத்து 334 மாணவிகள் என மொத்தம் 40 ஆயிரத்து 68 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதுகிறார்கள்.
மாவட்டம் முழுவதும் 130 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ்-2 தேர்வுகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
தேர்வுகள் செம்மையாக நடைபெறுவதை உறுதிபடுத்துவதற்கும், தீவிரமாக கண்காணிப்பதற்கும் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளில் முறைகேடுகள், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு மையத்தில் மாணவ-மாணவிகள் அமர்ந்து தேர்வு எழுதக்கூடிய இருக்கையில் பதிவெண்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டுகள் மேஜையில் ஒட்டப்பட்டன. சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவிகளின் பதிவெண்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டுகள் அனைத்தும் மேஜையில் ஒட்டும் பணியில் ஆசிரியைகள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி கூறுகையில், மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எவ்வித பதற்றமும் இல்லாமல் எழுத வேண்டும். தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதுவது நல்லது. முடிந்தவரை அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுத வேண்டும். பிளஸ்-2 தேர்வில் எடுக்கும் மதிப்பெண் தான் மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன், என்றார்.
Related Tags :
Next Story