மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்: விவசாயியை அடித்துக்கொன்ற மகன்-பேரன் கைது இயற்கை மரணம் என நாடகமாடியது அம்பலம்
தலைவாசல் அருகே விவசாயி மர்ம சாவு குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், திடீர் திருப்பமாக அவரை மகன் மற்றும் பேரனே அடித்துக்கொன்று விட்டு இயற்கை மரணம் என்று நாடகமாடியது அம்பலம் ஆகி உள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
தலைவாசல்,
இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
தலைவாசல் அருகே நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 85), விவசாயி. இவருடைய மனைவி ராமாயி. இவர் இறந்து 3 மாதங்கள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் இருந்தனர். இவர்களில் மூத்த மகன் ஏற்கனவே இறந்து விட்டார்.
இந்த நிலையில் கருப்பண்ணன் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளூரில் உள்ள தனது மகள் அஞ்சலை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 25-ந் தேதி காலையில், நாவலூரில் உள்ள ஒரு பெட்டி கடைக்கு வெற்றிலை வாங்க சென்ற கருப்பண்ணன் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அஞ்சலை, மாயமான தனது தந்தையை அக்கம், பக்கத்தில் தேடி உள்ளார்.
அப்போது தனது அண்ணன் தங்கராசுவும், அவரது மகன் இளையராஜாவும் மோட்டார் சைக்கிளில் தந்தையை அழைத்து சென்றதாக அக்கம்பக்கத்தினர் கூறினர். இதனால் அவர் தனது தந்தையை தேடுவதை நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில் மறுநாள் காலையில், கருப்பண்ணன், மகன் தங்கராசுவின் விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனிடையே மகள் அஞ்சலை தனது தந்தை சாவில் மர்மம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் விவசாயி மர்ம சாவு குறித்து வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சொத்து தகராறில் கருப்பண்ணனை அவரது மகன் தங்கராசு (65) மற்றும் பேரன் இளையராஜா(27) ஆகியோர் சேர்ந்து அடித்துக்கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து விசாரித்தனர்.
போலீசாரிடம் தங்கராசு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கும், எனது தந்தைக்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. அவர் எனது தங்கை அஞ்சலைக்கு வீடு ஒன்றை எழுதிக்கொடுத்து விட்டு அஞ்சலையின் வீட்டிலேயே வசித்து வந்தார். எனவே சொத்துகளை எனது பெயருக்கு எழுதி தருமாறு நான் தொடர்ந்து எனது தந்தையிடம் கேட்டு வந்தேன்.
சம்பவத்தன்று நானும், எனது மகன் இளையராஜாவும் வெற்றிலை வாங்க கடைக்கு வந்த எனது தந்தையை மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து அழைத்து சென்று சாப்பாடு வாங்கி கொடுத்தோம். பின்னர் அவரிடம் சொத்துகளை எனது பெயருக்கு மாற்றித்தருமாறு கேட்டேன். ஆனால் அப்போதும் அவர் மறுக்கவே ஆத்திரம் அடைந்த நான் அவரது மார்பில் எட்டி உதைத்து தாக்கினேன்.
பின்னர் நானும், எனது மகனும் சேர்ந்து அடித்து தாக்கியதில் கீழே விழுந்த அவர் இறந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் எங்கள் விவசாய தோட்டத்தில் அவரின் உடலை போட்டு விட்டு இயற்கை மரணம் அடைந்து விட்டதாக ஊர்க்காரர்களிடம் கூறி, உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தோம். ஆனால் நாங்கள் ஊர்க்காரர்களிடம் நாடகமாடிய நிலையில், எனது தங்கை போலீசில் புகார் கொடுத்து விட்டார். இதனால் நாங்கள் இந்த கொலை வழக்கில் மாட்டிக்கொண்டோம்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறி உள்ளார்.
சொத்து தகராறில் தந்தையை மகன், பேரனே அடித்துக்கொன்றுவிட்டு இயற்கை மரணம் என்று நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story