பூதப்பாண்டி அருகே கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை விற்ற பெண் அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்
பூதப்பாண்டி அருகே கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை விற்ற பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், குழந்தையை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
பூதப்பாண்டி,
பூதப்பாண்டி அருகே மார்த்தால் தெரு பகுதியில் ஒரு இளம்பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இதில் அந்த பெண் கர்ப்பமானார். கர்ப்ப காலத்தில் கிராம சுகாதார செவிலியர் அந்த பெண்ணின் வீட்டுக்கு நேரடியாக சென்று மருந்து, மாத்திரைகள் கொடுத்து ஆலோசனை வழங்கி வந்தார்.
நிறைமாத கர்ப்பிணியான அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிகிச்சை முடிந்து தாயும், குழந்தையும் வீடு திரும்பினர்.
இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கிராம சுகாதார செவிலியர் ஒருவர் குழந்தையை பார்ப்பதற்காக இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அங்கு குழந்தையை காணவில்லை. இதுகுறித்து இளம்பெண்ணிடம் கேட்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால், சந்தேகம் அடைந்த சுகாதார செவிலியர் சமூக நல அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார்.
அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி குமுதா, அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார். அப்போது, குழந்தையை மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் மணவாளக்குறிச்சிக்கு சென்று விற்கப்பட்ட குழந்தையை மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து குழந்தைகள் நல அதிகாரி குமுதா பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இளம்பெண் மீதும், குழந்தையை வாங்கிய மணவாளக்குறிச்சியை சேர்ந்த கிங்சிலி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story