செம்பூரில் தமிழர் பகுதியில் குடிசை வீடுகள் இடித்து அகற்றம்
செம்பூரில் தமிழர் பகுதியில் குடிசை வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. குடியிருப்புவாசிகள் மாநகராட்சி அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு உண்டானது.
மும்பை,
மும்பை செம்பூர் ஜீஜாமாதா நகரில் காஸ்வாலா குடிசை பகுதி உள்ளது. இங்கு சுமார் 50 குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்.
இந்த நிலையில், அந்த குடிசை வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி, மாநகராட்சி அவற்றை இடித்து தள்ள நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக குடிசைவாசிகளை காலி செய்யும்படி, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதனால் குடிசைவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் செய்வதறியாது தவித்தனர்.
இந்தநிலையில் மாநகராட்சியினர் அறிவித்தது போல் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் அங்கு வந்தனர். அவர்கள் பின்னர் அங்குள்ள குடிசை வீடுகளை இடித்து தள்ளினார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்த குடியிருப்புவாசிகள் அங்கு வந்திருந்த மாநகராட்சி அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது.
இதுபற்றி அங்கு வசித்து வரும் சுந்தர் என்பவர் கூறுகையில், ‘‘நாங்கள் சுமார் கடந்த 20 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம். அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. ஆனால் தற்போது சட்டவிரோதமாக கட்டப்பட்டது என கூறி மாநகராட்சி வீடுகளை இடித்து விட்டது. இதனால் நாங்கள் தற்போது நடுரோட்டில் நிற்கிறோம்.
அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. வீடுகள் இடிக்கப்பட்டு விட்டதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சிறுகுழந்தைகளை வைத்து கொண்டு பரிதவிக்கிறோம். எங்களுக்கு மாநகராட்சி மாற்று வீடு வழங்க வேண்டும்’’ என்றார்.
Related Tags :
Next Story