திருப்பூரில் கத்தியுடன் இளம்பெண் மறியல் போராட்டம், டாஸ்மாக் பார் நிர்வாகி கைது; மதுபாட்டில்கள் பறிமுதல்
திருப்பூரில் அதிகாலை முதல் மது விற்பனை நடப்பதை கண்டித்து டாஸ்மாக் பார் முன்பு கத்தியுடன் இளம்பெண் மறியலில் ஈடுபட்ட சம்பவத்தை தொடர்ந்து டாஸ்மாக் பார் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மேலும், பாரில் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன் நகரில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக அதிகாலை முதல் மது விற்பனை நடப்பதை கண்டித்து அண்ணா நகரை சேர்ந்த கவிதா (வயது 23) என்ற இளம்பெண் நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் பார் முன்பு கையில் கத்தியுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாருக்குள் யாரும் மது குடிக்க செல்லக்கூடாது என்று கூறியபடி இருந்தார். பின்னர் அவர் பி.என்.ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி அறிந்ததும் திருமுருகன்பூண்டி போலீசார் விரைந்து சென்று கவிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர் கூறும்போது, “மதுக்கடைகளை பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள பார்களில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் எனது கணவர் காலையிலேயே மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருக்கிறார். எனது குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் எப்படி வாழ்க்கை நடத்துவது, உரிய நேரத்தில் பார்கள் செயல்படும் வகையில் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். பார்களில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும்“ என்றார்.
கவிதா கத்தியுடன் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக நேற்று பாரில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது பாரில் வைக்கப்பட்டிருந்த 11 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். டாஸ்மாக் பார் நிர்வாகியான ஈரோடு மாவட்டம் அசோகபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் (35) என்பவரை கைது செய்தனர். மேலும் கத்தியுடன் மறியல் போராட்டம் நடத்திய கவிதாவை அழைத்து இனிமேல் இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story