மும்பை நகரின் பாதுகாப்பை கருதி மராட்டிய சட்டசபை கூட்டம் முன்கூட்டியே முடிந்தது


மும்பை நகரின் பாதுகாப்பை கருதி மராட்டிய சட்டசபை கூட்டம் முன்கூட்டியே முடிந்தது
x
தினத்தந்தி 1 March 2019 4:43 AM IST (Updated: 1 March 2019 4:43 AM IST)
t-max-icont-min-icon

மும்பை நகரின் பாதுகாப்பை கருதி மராட்டிய சட்டசபை கூட்டம் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டது. இதனால் நேற்று எந்த ஒரு விவாதமும் இன்றி பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது.

மும்பை,

மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 25-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரூ.19 ஆயிரத்து 784 கோடி வருவாய் பற்றாக்குறை பட்ஜெட்டை நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் தாக்கல் செய்தார்.

நாளை (சனிக்கிழமை) வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற இருந்தது.

ஆனால் இந்திய துணை ராணுவ படை வீரர்கள் 40 பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, இந்திய விமானப்படை அந்த நாட்டுக்குள் புகுந்து பயங்கரவாதிகளை கொன்று குவித்தது. இந்த சம்பவத்தை அடுத்து இரு நாடுகள் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

மும்பை ஏற்கனவே பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நகரமாகும். குறிப்பாக 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் மார்க்கமாக ஊடுருவி பயங்கர தாக்குதல் நடத்தினர். இதல் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இதனால், தற்போது மும்பையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக ராணுவத்தினர் களமிறக்கப்பட்டு உள்ளனர். இந்த சமயத்தில் சட்டசபை கூட்டம் நடந்து வருவதால், அதற்காக மட்டும் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியது உள்ளது. இதனால் போலீசாரால் நகர பாதுகாப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தை பாதியில் முடித்து கொள்வது குறித்து ஆலோசிக்க நேற்று காலை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் பட்ஜெட் கூட்டத்தை முன்கூட்டியே முடித்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை சட்டசபை கூட்டம் தொடங்கியதும், எந்த ஒரு விவாதமும் இன்றி பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தானில் சிக்கிய இந்திய விமானப்படை வீரரை மீட்டு வரக்கோரி ஒரு வரி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. உறுப்பினர்களின் கரகோஷத்துடன் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நாளை வரை நடைபெற வேண்டிய கூட்டத் தொடர் நேற்று காலையிலேயே முடித்து வைக்கப்பட்டது.

முன்னதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-

நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க போலீசார் பணியமர்த்தப்பட வேண்டியது உள்ளது. நகரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்து போலீசார் அரசிடம் கோரிக்கை வைத்தனர். எனவே சட்டசபை கூட்டத்தை முடித்து கொள்ள அனைத்து கட்சியினரும் முன்வந்தனர். அதன்படி பட்ஜெட் கூட்டத் தொடரை முடித்து கொள்கிறோம்.

எல்லையை விமானப்படை பாதுகாக்கிறது. அதேபோல உள்நாட்டின் பாதுகாப்பிலும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். பாதுகாப்பை தீவிரப்படுத்தி இருப்பதால் மும்பை மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

எதிர்க்கட்சி தலைவர் (காங்கிரஸ்) ராதாகிருஷ்ண விகே பாட்டீல் பேசுகையில், அடுத்த 2 நாட்கள் மாநிலத்தின் வறட்சி நிலவரம் குறித்து பேச முடிவு செய்திருந்தோம். ஆனால் நாட்டின் பாதுகாப்பும், உள்நாட்டின் பாதுகாப்பும் மிக அவசியம் என்பதால் சட்டசபை கூட்டத்தை பாதியில் முடித்து கொள்ள சம்மதித்தோம் என்றார்.

அடுத்த சட்டசபை கூட்டம் ஜூன் 17-ந் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

இது 3-வது முறை

1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து மும்பையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக அப்போது மராட்டிய சட்டசபை கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அப்போது நாக்பூரில் நடைபெற்ற சட்டசபை கூட்டமும் பாதியில் நின்றது.

அதன்பின்னர் 3-வது முறையாக தற்போது மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story