புதிய டி.ஜி.பி. சுபோத் ஜெய்ஸ்வால் : மும்பை போலீஸ் கமிஷனராக சஞ்சய் பார்வே நியமனம்
மும்பை போலீஸ் கமிஷனர் சுபோத் ஜெய்ஸ்வால் மராட்டியத்தின் புதிய டி.ஜி.பி.யாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஜெனரலாக இருந்த சஞ்சய் பார்வே மும்பை போலீஸ் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மும்பை,
மராட்டிய மாநில டி.ஜி.பி.யாக இருந்த தத்தா பட்சல்கிகர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். ஆனால் அவருக்கு நவம்பர் 30-ந் தேதி வரை மூன்று மாதமும், பின்னர் டிசம்பர் 1-ந் தேதியில் இருந்து பிப்ரவரி 28-ந் தேதி வரை மூன்று மாதமும் பணி நீட்டிப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில், புதிய டி.ஜி.பி. பதவிக்கு மாநிலத்தில் உள்ள மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளான சுபோத் ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சய் பாண்டே, சஞ்சய் பார்வே, டி.கனகரத்னம், பிபின் பிகாரி, எஸ்.என். பாண்டே ஆகிய 6 பேரின் பெயர்களை மாநில அரசு மத்திய உள்துறையிடம் பரிந்துரை செய்தது.
பணி நீட்டிப்பு காலம் முடிந்த நிலையில் நேற்று டி.ஜி.பி. தத்தா பட்சல்கிகர் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த சுபோத் ஜெய்ஸ்வால் மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இவர் 1985-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அணியை சேர்ந்த அதிகாரி ஆவார்.
சுபோத் ஜெய்ஸ்வால் புதிய டி.ஜி.பி. ஆக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஜெனரலாக இருந்த சஞ்சய் பார்வேயை மும்பையின் புதிய போலீஸ் கமிஷனராக மாநில அரசு நியமித்தது.
கண்டிப்புடன் கூடிய மென்மையாக பேசும் தன்மை கொண்டவர் என அறியப்படும் சஞ்சய் பார்வே 1987-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அணியை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஆவார்.
சஞ்சய் பார்வே மும்பையில் போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராகவும், பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனராகவும் கட்சிரோலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், சோலாப்பூர் போலீஸ் கமிஷனராகவும் இருந்து உள்ளார்.
நேற்று அவர் மும்பையின் புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார்.
பின்னர் சஞ்சய் பார்வே கூறுகையில், “மும்பை பாதுகாப்பாக இருக்கிறது. வரும் நாட்களிலும் பாதுகாப்பாகவே இருக்கும். நகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும், குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் பாதுகாப்பிலும் மும்பை போலீஸ் முன்னுரிமை கொடுக்கிறது” என்றார்.
Related Tags :
Next Story