வீர மரணம் அடைந்த குருவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட ரூ.15 கோடி நிதியை பங்கிட்டு கொள்வதில் தாய், மனைவி இடையே தகராறு
வீர மரணம் அடைந்த குருவின் குடும்பத்திற்கு இதுவரை ரூ.15 கோடி நிதி சேர்ந்துள்ளது. அந்த நிதியை பங்கிட்டுக் கொள்வதில் குருவின் தாய்க்கும், அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கொழுந்தனை 2-வதாக திருமணம் செய்து கொள்ள சொன்னதால் கலாவதி போலீசில் புகார் அளித்தார்.
ஹலகூர்,
காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் கடந்த மாதம்(பிப்ரவரி) 14-ந் தேதி இந்திய துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரைக் கொண்டு மோதி வெடிக்கச் செய்து பயங்கர தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த பயங்கர தாக்குதலில் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா குடிகெரே கிராமத்தைச் சேர்ந்த துணை ராணுவ வீரர் குரு என்பவரும் பலியானார்.
இதையடுத்து அவரது உடல் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு அதே பகுதியில் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் வீர மரணம் அடைந்த குருவின் குடும்பத்தினருக்கு கர்நாடக மாநில அரசு, தன்னார்வலர்கள் என பலரும் நிதி வழங்கினர். இவ்வாறாக அவர்களுக்கு ரூ.15 கோடி வரை நிதி சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பணத்தை பங்கிட்டுக் கொள்வதில் குருவின் மனைவி கலாவதிக்கும், குருவின் பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கலாவதிக்கும், அவருடைய மாமியாரான குருவின் தாய்க்கும் பெரிய பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.
அப்போது குருவின் தம்பியை(கலாவதிக்கு கொழுந்தன்), 2-வதாக திருமணம் செய்து கொள்ளும்படியும், அப்படி செய்து கொண்டால் பணம் தங்களுடைய குடும்பத்திடமே இருக்கும் என்றும் குடும்பத்தினர் ஆலோசனை கூறி உள்ளனர்.
ஆனால் இதை கலாவதி ஏற்க மறுத்தார். தொடர்ந்து அவர்கள் வற்புறுத்தியதால் கலாவதி இதுபற்றி நேற்று முன்தினம் மத்தூர் போலீசில் புகார் செய்தார். மேலும் இப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணுமாறு போலீசாரிடம் கலாவதி கேட்டுக் கொண்டார். இதனால் இப்பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.
இதையடுத்து கலாவதியை அழைத்து பேசிய போலீசார், ‘‘இது உங்களது குடும்ப பிரச்சினை. அதுமட்டுமல்லாமல் இது உணர்வுப்பூர்வமான பிரச்சினை. அதனால் நீங்களே இப்பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஏதேனும் சட்ட மீறல்கள் நடந்தால் அப்போது சட்டம் தன் கடமையை செய்யும்’’ என்று அறிவுரை கூறி அனுப்பி உள்ளனர்.
பின்னர் கலாவதி, மண்டியாவுக்கு வந்த முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு விரைவில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி உறுதி அளித்துள்ளார். மேலும் குருவின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகிலும், மந்திரி டி.சி.தம்மண்ணாவை சந்தித்து கலாவதிக்கு உடனடியாக அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை குருவின் குடும்பத்திற்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். அதன்படி பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர்கள் சார்பில் ரூ.16 லட்சம் நிதி குருவின் குடும்பத்திற்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story