மந்திரி டி.கே.சிவக்குமார் மீது வருமான வரித்துறையினர் தொடர்ந்த 3 வழக்குகள் ரத்து


மந்திரி டி.கே.சிவக்குமார் மீது வருமான வரித்துறையினர் தொடர்ந்த 3 வழக்குகள் ரத்து
x
தினத்தந்தி 1 March 2019 4:45 AM IST (Updated: 1 March 2019 5:21 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி டி.கே.சிவக்குமார் மீது வருமான வரித்துறையினர் தொடர்ந்த 3 வழக்குகளை ரத்து செய்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவர், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மந்திரியாக இருந்தார். அப்போது கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை டி.கே.சிவக்குமார், ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள ரெசார்ட் ஓட்டலில் தங்கி இருந்தபோது நடந்தது. இந்த சோதனையின் போது மந்திரி டி.கே.சிவக்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக கூறி வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே இந்த வழக்கின் சாட்சிகளை அழித்தது, சொத்து விவரங்கள் குறித்து தவறான தகவல்களை அளித்தது, விசாரணைக்கு ஒத்துழைக்காதது என்று கூறி மந்திரி டி.கே.சிவக்குமார் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மேலும் 3 வழக்குகளை வருமான வரித்துறையினர் தொடர்ந்தனர். இந்த நிலையில் தன் மீது வருமான வரித்துறையினரால் தொடரப்பட்ட மேலும் 3 வழக்குகளை ரத்து செய்யக்கோரி மந்திரி டி.கே.சிவக்குமார் மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வி.பட்டீல் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிலையில், அந்த மனு மீதான விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று நீதிபதி பி.வி.பட்டீல் தீர்ப்பு கூறினார். அப்போது மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில், மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எதிராக வருமான வரித்துறையினர் தொடர்ந்த 3 வழக்குகளிலும் போதிய ஆதாரங்கள் இல்லாததால், அந்த வழக்குகளை ரத்து செய்து நீதிபதி பி.வி.பட்டீல் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதனால் மந்திரி டி.கே.சிவக்குமார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அதே நேரத்தில் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வருமான வரித்துறையினர் மேல் முறையீடு செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

Next Story