அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா? நாராயணசாமி பரபரப்பு பதில்


அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா? நாராயணசாமி பரபரப்பு பதில்
x
தினத்தந்தி 1 March 2019 5:21 AM IST (Updated: 1 March 2019 5:21 AM IST)
t-max-icont-min-icon

அரசியலில் இருந்து ஓய்வுபெறுவது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி பரபரப்பு பேட்டி அளித்தார்.

புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நானும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் 6 நாட்கள் கவர்னர் மாளிகை முன்பு 39 கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினோம். அதில் ஒரு சில ஏற்கப்பட்டுள்ளது. சில பிரச்சினைகள் கோர்ட்டில் உள்ளது. சில நிறைவேறும் தருணத்தில் உள்ளது. போராட்ட சமயத்தில் கவர்னரிடம் பேச்சுவார்த்தைக்கு சென்றபோது அரசு அதிகாரிகளுக்கு தேர்வு நடத்த உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தெளிவாகவே கூறினேன். அதேபோல் தனிப்பட்ட முறையில் விருதுகள், பரிசுகள் வழங்கும் அதிகாரமும் இல்லை என்றும் தெரிவித்தேன். அதற்கு அவரும் உரிய பதில் அளிக்கவில்லை.

அரசு ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் தேர்வு எழுதிதான் இந்த பதவிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு உரிய அமைப்புகள் மூலம் தேர்வு நடத்தப்பட்டுதான் பதவி உயர்வுகள் அளிக்கப்படுகிறது. தற்போது கவர்னர் கிரண்பெடி தேர்வு வைப்பது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சகட்டம். அவர் அளிக்கும் சான்றிதழ்கள் பதவி உயர்வுக்கு எந்தவிதத்திலும் பயனாகாது. உரிய அனுமதியின்றி வழங்கப்படும் அந்த சான்றிதழ்கள் சாதாரண காகிதத்துக்கு சமம்.

ஒரு அரசு ஊழியருக்கு ரூ.20-க்கு மேல் சன்மானம் வழங்கக்கூடாது. அப்படி வழங்கினால் அது லஞ்சம் கொடுப்பதற்கு சமமானது. இதுதொடர்பாக நான் கேட்ட கேள்விகளுக்கு கவர்னரால் பதில் கூற முடியவில்லை. அவர் சமாதானம் சொல்ல ஆரம்பித்தார். புதுவை மாநில நிர்வாகத்துக்கு தினமும் குந்தகமும், வளர்ச்சிக்கும் தடையாக உள்ளார். கவர்னரின் அதிகாரம் தொடர்பாக லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு விரைவில் வர உள்ளது.

அதிகாரத்தை மீறி செயல்படும் கவர்னருக்கு புதுவை மக்கள், அரசு ஊழியர்கள் விரைவில் பதில் சொல்லுவார்கள். கவர்னர் தேர்வு வைப்பது தொடர்பாக நிலை ஆணையையும் நான் பிறப்பித்துள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலுவை மாற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனவே?

பதில்: தலைமை தேர்தல் அதிகாரி யாராக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் முடிவு எடுக்க வேண்டியது இந்திய தேர்தல் ஆணையம்தான்.

கேள்வி: காங்கிரஸ் கட்சி தலைமை எம்.பி. தேர்தலில் போட்டியிட சொன்னால் போட்டியிடுவீர்களா?

பதில்: கட்சி தலைமை என்ன கூறினாலும் செய்வேன். நான் பல தேர்தல்களில் போட்டியிட்டுவிட்டேன். இனிமேல் (சிரித்துக்கொண்டே) ரிட்டையர்டுமெண்டுதான் (ஓய்வுதான்). எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உள்ளது. இளைய சமுதாயத்துக்கு வழிவிட வேண்டியதுதான். கட்சி வேலைதான் எனக்கு பிடிக்கும். கவர்னர் போல் தொல்லை தரும் வேலை எல்லாம் பிடிக்காது. எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது. நான் ஒரு சாமியார்.

கேள்வி: புதுவையில் திட்டமிட்டபடி நாளை (இன்று) முதல் பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்படுமா?

பதில்: அதை சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கேளுங்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story