இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: அரபிக்கடலில் மீன்பிடிக்காமல் கரைக்கு திரும்பிய கர்நாடக மீனவர்கள்


இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: அரபிக்கடலில் மீன்பிடிக்காமல் கரைக்கு திரும்பிய கர்நாடக மீனவர்கள்
x
தினத்தந்தி 1 March 2019 3:45 AM IST (Updated: 1 March 2019 5:21 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் உண்டாகும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கடற்படை அறிவுறுத்தலால் அரபிக்கடலில் மீன்பிடிக்க சென்ற கர்நாடக மீனவர்கள் மீன்பிடிக்காமல் உடனடியாக கரைக்கு திரும்பினர்.

பெங்களூரு,

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் கடந்த மாதம்(பிப்ரவரி) 14-ந் தேதி இந்திய துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது வெடிகுண்டு நிரப்பிய காரைக் கொண்டு மோதி பயங்கரவாதி ஒருவன் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

இந்த பயங்கர தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்திய விமானப்படை பதில் தாக்குதல் தொடுத்தது.

இந்த நிலையில் பயங்கர வாதிகள் கடல் வழியாக ஊடுருவலாம் என்பதால் இந்திய கடலோரங்கள் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. கடற்படையும், இந்திய கடலோர பாதுகாப்பு குழுமமும் இந்திய கடல் எல்லையில் ரோந்துப்பணி மேற்கொண்ட வண்ணம் உள்ளன. இது ஒருபுறம் இருக்க கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களும் உடனடியாக கரைக்கு திரும்புமாறு கடற்படை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி நேற்று கார்வாரில் இருந்து அரபிக்கடலில் 12 முதல் 18 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா மாவட்டங்களைச் சேர்ந்த கர்நாடக மீனவர்கள் மீன்களை பிடிக்காமல் தங்களுடைய விசைப்படகுகளுடன் உடனடியாக கரைக்கு திரும்பி உள்ளனர். அவர்கள் குஜராத், கோவா கடல் பகுதிகளுக்கு சென்று மீன்பிடிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழ்நிலை குறித்து அறிவுறுத்தப்பட்டதால் அவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பி உள்ளனர்.

மேலும் உஷார் நிலையில் இருக்கும்படி சுங்கத்துறை அதிகாரிகள், மீன்வளத்துறை, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி மாவட்ட நிர்வாகங்கள் ஆகியவற்றுக்கு கடற்படை சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. இதையடுத்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக கார்வார் துறைமுகத்தில் படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Next Story