படைப்புழு தாக்குதலால் பாதிப்படைந்த மக்காச்சோள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை
படைப்புழு தாக்குதலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு பேரிடர் இழப்பு நிவாரண விதிகளின்படி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.
விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கலெக்டர் சிவஞானம் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலால் பாதிப்படைந்த விவசாயிகள் பற்றி கணக்கெடுக்கப்பட்டு மாநில பேரிடர் இழப்பு நிவாரண விதிகளின்படி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் 2017-18-ம் ஆண்டு பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் நெல் 2-ம் பருவத்துக்கு பயிர் காப்பீடு செய்த நரிக்குடி வட்டாரத்தில் 28 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அடுத்த 15 தினங்களுக்குள் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள், தாசில்தாரை அணுகி விண்ணப்பித்து இழப்பீட்டுத் தொகை கிடைக்க ஒத்துழைக்க வேண்டும். மாநில நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் சிவகாசி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுப்பணித்துறை மூலம் திருத்தங்கல் முதல் வாடியூர் வரை உள்ள கண்மாய்களையும், வரத்துக் கால்வாய்களையும் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருத்தங்கல் பெரியகுளம் கண்மாயில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு உள்ளது.
விராகசமுத்திரம், வில்வராயன்குளம் கண்மாய்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சின்னையன்கோட்டை அணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கால்நடை பராமரிப்பு துறை மற்றும் விவசாயத்துறை மூலம் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார், விவசாய துறை இணை இயக்குனர் அருணாசலம், கூட்டுறவு இணைப்பதிவாளர் திலீப் குமார், மண்டல கால்நடை இணை இயக்குனர் அருணாச்சலக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story