சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் எனக்கூறி மோசடி: பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர் சாலை மறியல்


சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் எனக்கூறி மோசடி: பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 March 2019 5:44 AM IST (Updated: 1 March 2019 5:44 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் கல்வி கற்பிக்கப்படுவதாக கூறி, அந்த கட்டணமே மாணவர்களின் பெற்றோரிடம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பெரம்பூர்,

சென்னை தண்டையார்பேட்டை ரத்தின சபாபதி தெருவில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரை 800 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அதில் 10-ம் வகுப்பில் 5 பேரும், 9-ம் வகுப்பில் 40 பேரும் பயின்று வருகிறார்கள். இவர்களுக்கு மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் கல்வி கற்பிக்கப்படுவதாக கூறி, அந்த கட்டணமே மாணவர்களின் பெற்றோரிடம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் வருகிற 5-ந்தேதி சி.பி. எஸ்.இ. 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது. ஆனால் இதுவரையில் மாணவர்களுக்கு ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்படவில்லை. இதுபற்றி பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் மாணவர்களின் பெற்றோர் விசாரித்தனர்.

அதில் அந்த தனியார் பள்ளிக்கு எல்.கே.ஜி. வகுப்புக்கு கூட இதுவரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்பட அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

எனவே சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் எனக்கூறி பணம் வசூலித்து மோசடி செய்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், தங்கள் பிள்ளைகளை 10-ம் வகுப்பு தேர்வு எழுத அரசு அனுமதி அளிக்கவேண்டும் என வலியுறுத்தியும் மாணவர்களின் பெற்றோர் நேற்று தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை தண்டையார்பேட்டை போலீசார், சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story