மாணவர்கள் தினமும் செய்தித்தாள், புத்தகம் வாசிக்க வேண்டும் வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பேச்சு


மாணவர்கள் தினமும் செய்தித்தாள், புத்தகம் வாசிக்க வேண்டும் வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 2 March 2019 4:30 AM IST (Updated: 1 March 2019 10:35 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் தினமும் செய்தித்தாள், புத்தகம் வாசிக்க வேண்டும் என்று வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பேசினார்.

காட்பாடி, 

‘திறன்மிகு மாணவர் 2022’ என்ற திட்ட தொடக்க விழா, உலக தாய்மொழி தின விழா, தேசிய அறிவியல் நாள் விழா ஆகிய முப்பெரும் விழா காட்பாடி தாலுகா பில்லாந்திப்பட்டு அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவிற்கு ஓய்வுபெற்ற முதன்மைக்கல்வி அலுவலர் டி.வி.சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.இம்மானுவேல், கே.வி.குப்பத்தை சேர்ந்த வக்கீல் டி.முனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பாளர் ஆர்.வேல்முருகன் வரவேற்றார்.

துணை அமைப்பாளர் வே.விஷ்ணுபிரியா திட்ட அறிக்கை வாசித்தார். இதில் சிறப்பு விருந்தினராக வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் கலந்து கொண்டு ‘திறன்மிகு மாணவர் 2022’ திட்டத்தினையும், புத்தக வாசிப்பு பழக்கத்தினையும் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாம் எப்போதும் தாய் மொழியில் தான் பேச வேண்டும். தமிழ், கிரேக்கம், சீனம் உள்ளிட்ட 6 மொழிகள் தான் பழமையான மொழிகள் என கருதப்படுகிறது. மாணவர்கள் தமிழில் பேச வேண்டும், தமிழ் படிக்க வேண்டும். இதில் தமிழ்வழி படிக்கும் மாணவர்கள் தமிழில் எழுதி படிக்கின்றனர். தாய்மொழி மிகவும் முக்கியம். புத்தகத்தை தினமும் படிக்க வேண்டும். 70 சதவீதம் இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா. இளைஞர்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வி பெற்று முன்னேறி வருவது பாராட்டத்தக்கது.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வகையில் மாணவர்கள் ஆசிரியர்களை மதித்து நடந்து கல்வி அறிவில் திறமை பெற வேண்டும். நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை முன்மாதிரியாக கொள்ள வேண்டும். மாணவர்கள் தினமும் செய்தித்தாள் வாசிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் செய்தித்தாள் வாங்கப்படுகிறது. அதனை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி வட்டக்கிளை செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், வக்கீல் ஆர்.ராதிகா, கே.வி.குப்பம் லெனின்சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவர்களுக்கான புத்தக வாசிப்பு விழா குழுவினர் வீ.குமரன், டி.கணேசன், எம்.பிரபு, விநாயகம் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.

Next Story