மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள் கலெக்டர் நேரில் பார்வையிட்டார்


மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள் கலெக்டர் நேரில் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 2 March 2019 4:00 AM IST (Updated: 1 March 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர்.

வேலூர்,

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 422 பேர் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 169 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வுப்பணியில் 220 தலைமை ஆசிரியர்களும், 1,600 முதுகலை ஆசிரியர்களும், 1,000 பட்டதாரி ஆசிரியர்களும், தேர்வு மையங்களை கண்காணிக்க 250 பறக்கும்படை உறுப்பினர்களும் ஈடுபட்டனர்.

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவ- மாணவிகள் காலையிலேயே எழுந்து வீட்டிலும், அருகாமையில் உள்ள கோவிலுக்கும் சென்று சாமி கும்பிட்டுவிட்டு தேர்வு மையங்களுக்கு செல்லத் தொடங்கினார்கள். அப்போது ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

பின்னர் அவர்கள் பள்ளிக்கூட வளாகத்திலும், பள்ளி வளாக மரத்தடியிலும் கூட்டம், கூட்டமாக அமர்ந்து தாங்கள் ஏற்கனவே படித்த பாடங்களை திருப்பி பார்த்துக் கொண்டனர். அத்துடன் பாடத்தில் இருந்த சந்தேகங்களை தங்களுடைய தோழர், தோழிகளிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

தேர்வு நேரம் நெருங்கியதும் மாணவ- மாணவிகள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மையத்திற்கு சென்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு சென்று அமர்ந்தனர். முதல் நாளான நேற்று தமிழ் பாடத்தேர்வு நடந்தது. பகல் 12.45 மணியளவில் தேர்வு நிறைவு பெற்றது. தேர்வு மிக எளிதாக இருந்ததாகவும் ஆர்வமுடன் தேர்வு எழுதியதாகவும் மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும்போது பறக்கும் படையினர் தேர்வறைக்கு வந்து மாணவ- மாணவிகளை கண்காணித்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வி அதிகாரிகள் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, மின்சார வசதி செய்து கொடுத்திருந்தனர். தேர்வறையில் செல்போன் உள்ளிட்ட தொலைதொடர்பு சாதனங்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.

கலெக்டர் ராமன் காட்பாடியில் உள்ள அக்சீலியம் பள்ளிக்கு சென்று தேர்வை பார்வையிட்டார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் உள்பட கல்வி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story