கடன் தொல்லையால் தனியார் பள்ளி ஆசிரியர் கிணற்றில் குதித்து தற்கொலை
திருவண்ணாமலையில் கடன் தொல்லையால் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை,
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருவண்ணாமலை அய்யங்குளத்தெருவை சோந்தவர் பாபு (வயது 49). இவர் திருவண்ணாமலையில் தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பூங்கோதை, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
பாபு திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்த நபர் பாபுவிடம் அடிக்கடி பணத்தை திருப்பிக்கேட்டு வந்துள்ளார். பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாததால் பாபுவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில் கடன் கொடுத்த நபர் மனைவி, குழந்தையுடன் நேற்று முன்தினம் காலையில் பாபுவின் வீட்டிற்கு சென்று கடன் தொகையை உடனே திருப்பித்தர வேண்டும் என கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற பாபு நேற்று காலை வரை வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல இடத்தில் தேடி வந்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை அய்யங்குளத் தெருவில் உள்ள அருணாகிரிநாதர் கோவிலில் மூடி இருந்த கிணறு திறந்து கிடப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்து உள்ளனர். அதில் பாபு உயிரிழந்த நிலையில் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறங்கி பாபுவின் உடலை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story