பணியாளர்களை தகாத வார்த்தையால் பேசிய பணி மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியல்


பணியாளர்களை தகாத வார்த்தையால் பேசிய பணி மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியல்
x
தினத்தந்தி 2 March 2019 3:15 AM IST (Updated: 2 March 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களை தகாத வார்த்தையால் பேசிய பணி மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியல் போராட்டம் நடந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கைவண்டூர் ஊராட்சிக்குட்பட்ட குப்பம்மாள் சத்திரம் பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நேற்று அந்த பகுதியில் உள்ள ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தார்கள். அப்போது அங்கு வந்த பணி மேற்பார்வையாளர் சரவணன் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண்களிடம் இங்கு உங்களை யார் வேலை செய்ய சொன்னார்கள் என கூறி அவர்களை தகாத வார்த்தையால் பேசி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த உடன் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு பணி மேற்பார்வையாளர் சரவணன் மீது தக்க நடவடிக்கை எடுத்து அவரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், கடந்த 2 மாதங்களாக முறையாக வேலைக்கான சம்பளத்தை வழங்காததை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென திருவள்ளூர் - திருப்பதி நெடுஞ்சாலை குப்பம்மாள் சத்திரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தகவல் அறிந்ததும் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள் பணிமேற்பார்வையாளரை வேறு இடத்திற்கு மாற்றுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

மறியல் காரணமாக அந்த வழித்தடத்தில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story