தமிழகத்தின் உரிமைகளை மீட்கவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு


தமிழகத்தின் உரிமைகளை மீட்கவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 2 March 2019 4:15 AM IST (Updated: 2 March 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் உரிமைகளை மீட்கவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது என்று நல்லம்பள்ளியில் நடந்த புதிய பஸ்நிலைய திறப்பு விழாவில் அன்புமணி ராமதாஸ் எம்.பி.பேசினார்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டது. இந்த பஸ்நிலைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கி புதிய பஸ்நிலையத்தை திறந்து வைத்து அங்கிருந்து டவுன் பஸ்கள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-

தமிழகத்தின் உரிமைகளை மீட்கவே அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது. நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, விவசாயக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி, காவிரி நதிநீர் உரிமை மீட்பு, தமிழகத்தில் விவசாய மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக முன்பு பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவும், தமிழகத்தின் மேம்பாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தவும் கூட்டணிக்குள் இருந்து உரிய அழுத்தத்தை கொடுத்து வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற வைப்போம்.

தர்மபுரி மாவட்டத்தில் விவசாய மேம்பாட்டிற்கான திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி பா.ம.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது தமிழக அரசு நீர்பாசன திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. காவிரி உபரி நீரில் 3 டி.எம்.சி.யை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி,குளங்களில் நிரப்புவது தொடர்பாக கையெழுத்து இயக்கம் நடத்தி 10 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் கையெழுத்துகளை பெற்று உள்ளோம். இந்த கோரிக்கை மனுவை முதல்-அமைச்சரிடம் நேரில் வழங்கி அந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

இந்த விழாவில் உதவி திட்ட இயக்குனர் ரவிசங்கர்நாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலன், அருள்மொழி தேவன், தாசில்தார் இளஞ்செழியன், கூட்டுறவு வங்கி தலைவர் சிவப்பிரகாசம், பா.ம.க. துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், மாநில துணைத்தலைவர்கள் சாந்தமூர்த்தி, பாடிசெல்வம், முனிவேல், மாவட்ட செயலாளர் சண்முகம், நிர்வாகிகள் அன்புகார்த்திக், முருகன், கிருஷ்ணமூர்த்தி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story