60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் தொழிலாளர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்


60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் தொழிலாளர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 March 2019 4:00 AM IST (Updated: 2 March 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கலெக்டர் கதிரவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

இந்தியாவில் வசிக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களான சாலையோர வியாபாரிகள், கை ரிக்ஷா இழுப்பவர்கள், கட்டிட தொழிலாளர்கள், கந்தல் துணி எடுப்பவர்கள், விவசாய தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், தோல் உற்பத்தி தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் 60 வயதை கடந்த பிறகு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் பெறும் வகையில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தில் சேருவதற்கு 18 வயது முதல் 40 வயது வரையிலான அமைப்பு சாரா தொழிலாளர்களில், மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்கு கீழ் உள்ளவர்கள் தகுதியானவர்கள். இதில் சேருவதற்கு ரூ.55 முதல் ரூ.200 வரை மாத தவணை தொகை வயதுக்கு ஏற்ப செலுத்த வேண்டும். இதற்கு ஈடான தொகையை மத்திய அரசு தவணை தொகையாக வழங்கும்.

இதில் சேர ஆதார் அடையாள அட்டை, தொலைபேசி எண், வங்கி சேமிப்பு கணக்கு அல்லது ஜன்தன் வங்கி கணக்கு ஆகிய விவரங்களுடன் அருகில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு செல்ல வேண்டும். மேலும் கணவன், மனைவி பற்றிய விவரம், நியமனதாரர் பற்றிய விவரம், மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள சுயசான்று ஆகியவற்றை கணினி மூலம் பதிவேற்றம் செய்து மாதாந்திர தவணை தொகையை செலுத்த வேண்டும். அதன்பிறகு ஓய்வூதிய கணக்கு எண் மற்றும் செலுத்தப்பட்ட தொகைக்கான ரசீது வழங்கப்படும்.

அடையாள அட்டையும், பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலும் சம்பந்தப்பட்ட தொழிலாளிக்கு வழங்கப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓய்வூதிய கணக்கில் வரவு செய்யப்பட்ட தொகையின் விவரம், ஓய்வூதிய கணக்கு விவரம் ஆகியன செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

அமைப்பு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஈட்டுறுதி கழகம் மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட உறுப்பினர்கள் மற்றும் வருமான வரி கட்டுபவர்கள் இந்த திட்டத்தில் சேர இயலாது.

மேலும் விவரங்களுக்கு பொதுமக்கள் உதவி மையங்களை அணுகலாம். எல்.ஐ.சி. அலுவலகங்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம், தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவன அலுவலகம், மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகம், அரசு சி.எஸ்.சி. மையங்கள் ஆகிய உதவி மையங்களை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.


Next Story