பவானிசாகர் வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பவானிசாகர் வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பவானிசாகர்,
பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் மணல்மேடு, ஒத்தப்பனமரக்காடு, தூராமொக்கை, சுஜில்குட்டை, பூதிகுப்பை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் அணையில் நீர் குறைந்த காலங்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில் மானாவாரி பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர்.
இதன்காரணமாக வனப்பகுதியில் இருந்து அணை நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் குடிக்க வரும் வனவிலங்குகள் பாதிக்கப்படுகிறது. எனவே வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் விவசாயம் செய்யக்கூடாது என வனத்துறையினர் தடை விதித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமையில் பவானிசாகர் வனத்துறை அலுவலகத்தின் முன்பு நேற்று திரண்டனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இதுபற்றி அறிந்ததும் வனச்சரகர் ஜான்சன் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறும்போது, ‘வனப்பகுதியை ஒட்டியுள்ள வனவிலங்குகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதை தடை செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. எனவே அப்பகுதியில் விவசாயம் செய்யக்கூடாது’ என்றார். அதற்கு பொதுமக்கள், ‘வனத்துறையினர் தடை விதித்தாலும் தொடர்ந்து விவசாயம் செய்வோம்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.