விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பரமசிவம் (தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்) பேசியதாவது:–
கடந்த 4 வருடமாக பால் விலை உயரவில்லை. ஆனால் கால்நடைகளுக்கான தீவனம் விலை பலமடங்கு அதிகரித்து விட்டது. லிட்டருக்கு ரூ.35 கிடைத்தால் தான் சமாளிக்க முடியும். கேரளாவில் இருந்து பால் கொண்டு வந்து திருப்பூர் மாவட்டத்தில் விற்பனை செய்கிறார்கள். தட்கல் மின் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மின் இணைப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை, மின்சாதங்கள் பற்றாக்குறையால் இந்த தாமதம் ஏற்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். விரைந்து மின் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மதுசூதனன்(தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்):–
உடுமலை ஏழுகுளம் பகுதியில் பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்த குழாய் அமைத்து பல கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. முறைகேடாக தண்ணீர் திருடும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. தண்ணீர் திருட்டை தடுக்க பொதுப்பணித்துறை, மின்வாரியத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். இதனால் குளத்தின் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் சம்பந்தமில்லாதவர்கள் தண்ணீரை பெற்று பயன்பெறுகிறார்கள். தண்ணீர் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் விளைவித்த காய்கறிகளுக்கு கடந்த 3 மாதமாக சரிவர விலை கிடைக்கவில்லை. வங்கியில் பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். தற்போது பயிர்க்கடன் வைத்துள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் கியாஸ் மானியம், 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் ஆகியவற்றை வங்கி அதிகாரிகள் கொடுக்க மறுக்கிறார்கள். பயிர்க்கடனை தள்ளுபடி செய்தால் மட்டுமே விவசாயிகள் வாழ முடியும். இதற்கு மாவட்ட கலெக்டர் அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.
விவசாயி பழனிசாமி:–
வட்டமலைக்கரை ஓடை அணையில் 500 ஏக்கர் பரப்பளவில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. அவற்றை அகற்றி, மற்ற மரங்களை நட வேண்டும். அணைக்கு தண்ணீர் கிடைப்பதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பதில் அளித்து பேசும்போது, வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான திட்டம் ஆய்வில் உள்ளது. அணைக்கு எப்படியாவது தண்ணீர் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பதே நோக்கம். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஆய்வு நடத்தி வருகிறார்கள் என்றார்.
ஈஸ்வரன்(கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்):–
திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து அடையாள அட்டை வழங்க வேண்டும். உழவர் சந்தை செயல்படும் நேரத்தில் அருகில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டை செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது. அவினாசி புதுப்பாளையம் குளப்பகுதியில் அதிகமாக மான்கள் உள்ளன. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மான்கள் தோட்டங்களுக்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே வனப்பகுதியில் தொட்டி அமைத்து மான்களுக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
குமார்(தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்):–
குடிமங்கலம் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் அங்குள்ள ஒரு கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தனர். அவை படைப்புழு தாக்குதலால் சேதமடைந்து விட்டது. ஆனால் நிவாரணத்தொகை பெறுவதற்கான பட்டியலில் அவர்கள் இடம்பெறவில்லை. இதற்கு உரிய ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.
லிங்கம் சின்னசாமி (அமராவதி நதிநீர் பாசன பாதுகாப்பு இயக்கம்):–
ஈரோடு–தாராபுரம்–பழனி ரெயில் பாதை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லாறு அணை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றார்.