சட்டசபையில் இன்று, இடைக்கால பட்ஜெட் நாராயணசாமி தாக்கல் செய்கிறார்


சட்டசபையில் இன்று, இடைக்கால பட்ஜெட் நாராயணசாமி தாக்கல் செய்கிறார்
x
தினத்தந்தி 2 March 2019 5:00 AM IST (Updated: 2 March 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டசபை இன்று கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் புதுவை சட்டசபை இன்று (சனிக்கிழமை) கூடுகிறது. காலை 11 மணிக்கு சபை கூடியதும் திருக்குறளை வாசித்து சபாநாயகர் வைத்திலிங்கம் சபை நடவடிக்கைகளை தொடங்குகிறார்.

முதல் நடவடிக்கையாக இரங்கல் குறிப்புகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ், முன்னாள் எம்.எல்.ஏ. சீத்தாவேதநாயகம், எழுத்தாளர் பிரபஞ்சன், புல்வாமா தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

அதைத்தொடர்ந்து 4 மாதத்துக்கு அரசின் நிதி செலவினத்துக்கு ஒப்புதல் கோரும் இடைக்கால பட்ஜெட்டை முதல்–அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்கிறார். அதற்கு சட்டசபையில் ஒப்புதல் அளித்ததும் சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கவர்னர் மாளிகை முன்பு நடத்திய போராட்டம் காரணமாக ஏற்பட்ட மாற்றங்கள், திட்டங்களை செயல்படுத்தாமை, பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

ஒரு சில மணிநேரங்களே இந்த கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் இன்றைய கூட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றும் தெரிகிறது.

கடந்த காலங்களில் வழக்கமாக மார்ச் மாதத்தில் அடுத்த நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக அந்த நிலைமை மாறி இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story