ஆட்சியை கலைக்க திட்டமிடும் டி.டி.வி. தினகரனின் கனவு ஒருபோதும் பலிக்காது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு


ஆட்சியை கலைக்க திட்டமிடும் டி.டி.வி. தினகரனின் கனவு ஒருபோதும் பலிக்காது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
x
தினத்தந்தி 2 March 2019 4:45 AM IST (Updated: 2 March 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

ஆட்சியை கலைக்க திட்டமிடும் டி.டி.வி. தினகரனின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

தாயில்பட்டி,

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி வெம்பக்கோட்டை அருகே ஆலங்குளத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. குருசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ராதாகிருஷ்ணன் எம்.பி., தலைமை கழக பேச்சாளர் ஜக்கையன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசும்போது கூறியதாவது:–

ஜெயலலிதா விட்டு சென்ற திட்டங்களை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் செயல்படுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் பெயர் மக்கள் மனதில் எப்படி நிலை நின்றதோ அதேபோன்று தற்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர் தினகரன். அவர் தற்போது தி.மு.க.வோடு மறைமுகமாக கூட்டணி வைத்துக்கொண்டு ஆட்சியை கலைக்க திட்டம் போடுகிறார். அவருடைய கனவு ஒரு போதும் பலிக்காது. டி.டி.வி. தினகரனை நம்பி இனியும் யாரும் செல்ல வேண்டாம். வைகோவிற்கு என்ன சூழ்நிலையோ தி.மு.க.வோடு கூட்டணி வைத்துள்ளார். மக்கள் நலன் ஒன்றே தாரக மந்திரம் என்ற அடிப்படையில் செயல்படும் இந்த ஆட்சிக்கு பொதுமக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். ஆலங்குளம் சிமெண்டு ஆலை எந்த சூழ்நிலையிலும் மூடப்படாது. ஆலையை தொடர்ந்து இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து ஏழை மக்களுக்கு தையல் எந்திரம், சலவை பெட்டி, இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ராஜவர்மன், ஒன்றிய செயலாளர்கள் எதிர்கோட்டை மணிகண்டன், ராமராஜ், புதுப்பட்டி கருப்பசாமி, வேல்முருகன், மாவட்ட மகளிரணி துணைச்செயலாளர் ஈஸ்வரி, ஒன்றிய அவைத்தலைவர் அழகர்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பார்த்தசாரதி, கிருஷ்ணமூர்த்தி, கே.வி.கே.ராஜ், எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய செயலாளர் பசுபதிராஜ், எதிர்கோட்டை கூட்டுறவு வங்கி தலைவர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ராஜபாளையம் முன்னாள் யூனியன் துணைத்தலைவர் குட்டி தலைமையில் 200 பேர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

முன்னதாக விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:–

பட்டாசு தொழிலை பாதுகாக்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீலை கொண்டு வாதாடியதன் பேரில் பட்டாசு ஆலைகள் திறப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிவகாசி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்களும் பட்டாசு தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நான் முதல்–அமைச்சரை சந்தித்தபோது பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினேன். இதனை தொடர்ந்து பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து பட்டாசு தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

டி.டி.வி. தினகரன், பிரதமர் மோடி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என கூறியுள்ளது தேவையற்றது. பிரதமர் மோடி பாரதீய ஜனதா கட்சியில் உள்ளார். அவர் இந்நாட்டின் பிரதமர் நாட்டின் பாதுகாப்பையும், இறையாண்மையையும் காப்பாற்றக்கூடிய வல்லமை படைத்தவர். நாட்டிற்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. வலுவான கூட்டணி அமைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story