விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட குளிரூட்டப்பட்ட குடிநீர் மையம் மாயம் புதிய ஏற்பாட்டில் இறங்கியுள்ள நகரசபை நிர்வாகம்
விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்பட்டுருந்த குளிரூட்டப்பட்ட குடிநீர் மையம் எந்திரத்தோடு மாயமாகிவிட்ட நிலையில் புதிதாக குடிநீர் மையம் அமைக்கும் நடவடிக்கையில் நகர சபை நிர்வாகம் இறங்கியுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் பழையபஸ் நிலையம் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள நிலையில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துசெல்லும் நிலை உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான குடிநீர் வசதி இல்லாத நிலையில் கடந்த முறை எம்.எல்.ஏ.வாக இருந்த மாபா. பாண்டியராஜன் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டுநிதியின் கீழ் ரூ.3½ லட்சம் மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தை ஏற்படுத்தி தந்தார். இந்த மையத்தின் மூலம் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு குளிரூட்டப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டுவந்தது.
இந்நிலையில் நகர சபை நூற்றாண்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் பஸ் நிலையத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது. அப்போது பஸ் நிலையத்தில் இருந்த குளிரூட்டப்பட்ட குடிநீர் மையத்தில் இருந்த எந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் அகற்றப்பட்டன. அப்போது நகரசபை நிர்வாகம் சீரமைப்பு பணி முடிந்த பின்பு மீண்டும் இந்த குளிரூட்டப்பட்ட குடிநீர் மையம் செயல்பட தொடங்கும் என தெரிவித்தது. இந்த மையத்தில் இருந்த எந்திரம் மற்றும் உபகரணங்கள் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள சுகாதார அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. பஸ் நிலைய சீரமைப்பு பணி முடிந்த பின்பு மீண்டும் குளிரூட்டப்பட்ட குடிநீர்மையத்தை தொடங்க வேண்டும் என நகரசபை நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் நகரசபை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சுகாதார அலுவலகத்தில் இருந்த குடிநீரை குளிரூட்டும் எந்திரம் மற்றும் உபகரணங்கள் மாயமாகிவிட்டது. சீரமைக்கப்பட்ட பஸ் நிலையத்திலும் பயணிகளுக்கு எவ்வித குடிநீர் வசதியும் செய்து தரப்படவில்லை.
மாயமாகிவிட்ட குடிநீரை குளிரூட்டும் எந்திரம் பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையில் பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என பலமுறை சுட்டிக்காட்டிய பின்பு தற்போது நகரசபை நிர்வாகம் புதிய குடிநீர் வழங்கும் மையம் அமைக்க கட்டுமானப்பணிகளை தொடங்கிஉள்ளது. அதுவும் பஸ் நிலையத்தின் வடகிழக்கு பகுதியில் நவீன கழிப்பறை அருகே குடிநீர் வழங்கும் மையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுஉள்ளது. புதிய ஏற்பாட்டினை தொடங்கியுள்ள நகரசபை நிர்வாகத்தின் நடவடிக்கை வரவேற்கப்படவேண்டியதுதான் என்றாலும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை விட பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் வேறு இடத்தை தேர்வு செய்திருக்கலாம் என்று கருத்து கூறப்படுகிறது.
மேலும் ஏற்கனவே இருந்த குடிநீர் குளிரூட்டும் எந்திரத்தை தேடி கண்டுபிடித்து மீண்டும் பஸ் நிலையத்தில் நிறுவி விட்டால் நகராட்சி நிர்வாகத்திற்கு செலவு ஏதும் இல்லாத வகையில் குடிநீருக்கான மையம் அமைந்துவிடும். நகராட்சி நிர்வாகம் அந்த முயற்சியை ஏன் மேற்கொள்ள வில்லை என்று தெரியவில்லை. எது எப்படியாயினும் மாயமான குடிநீர் குளிரூட்டும் எந்திரத்தை கண்டுபிடிக்கவும் அந்த எந்திரம் கிடைக்காத பட்சத்தில் பொறுப்பானவர்கள் மீது நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும்.