கன்னியாகுமரிக்கு சென்ற வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு
கன்னியாகுமரியில் நடந்த விழாவில் கலந்துகொள்ள சென்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நெல்லை,
கன்னியாகுமரியில் நேற்று பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து காரில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டார். அவருக்கு நெல்லை, பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் மேம்பாலம் அருகில் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி, எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலாசத்யானந்த், வசந்திமுருகேசன், கே.ஆர்.பி.பிரபாகரன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், எம்.எல்.ஏ.க்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள், நெல்லை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, சிறுபான்மை பிரிவு செயலாளர் கபிரியேல்ஜெபராஜன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், சூப்பர் மார்க்கெட் முன்னாள் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டிபாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சியோன்தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கரகாட்டம், ஒயிலாட்டம், தாரை தப்பட்டை, செண்டை மேளம் முழங்க முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி விமானத்தில் வருவதாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் காலை 8 மணிக்கே தொண்டர்களும், மகளிர் அணியினரும் கட்சி கொடிகளுடன் கே.டி.சி.நகர் பாலம் அருகில் குவிந்து இருந்தனர். ஆனால் தூத்துக்குடி விமானம் பழுதடைந்ததால் மதுரைக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து காரில் வந்தார். காலை 9 மணிக்கு வருவதாக இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதியம் 12 மணிக்கு வந்தார். அதுவரை தொண்டர்களும், பொதுமக்களும் காத்திருந்து அவரை வரவேற்றனர்.
நெல்லை வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கலெக்டர் ஷில்பா, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முதல்-அமைச்சருடன் காரில் அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் சென்றனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story