விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், தாமதமாக பணம் பட்டுவாடா செய்வதாக கூறி விவசாயிகள் சாலை மறியல்


விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், தாமதமாக பணம் பட்டுவாடா செய்வதாக கூறி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 March 2019 3:45 AM IST (Updated: 2 March 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தாமதமாக பணம் பட்டுவாடா செய்வதாக கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு மணிலா, எள், உளுந்து, காராமணி, நெல் போன்ற விளைபொருட்கள் வரத்து அதிகமாக உள்ளது. விவசாயிகள் விற்பனை செய்த பொருட்களுக்கு தினமும் வியாபாரிகள் பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். இதில் அதிகமாக உள்ள தொகைக்கு மறுநாள் அல்லது 5 நாட்கள் கழித்து பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று செஞ்சி தாலுகா திருவம்பட்டை சேர்ந்த விவசாயி சிவசங்கர் என்பவர், 2 நாட்களுக்கு முன்பு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்த காராமணி பயிருக்கு தனக்கு வர வேண்டிய ரூ.25 ஆயிரத்தினை பட்டுவாடா செய்பவரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் விவசாயி சிவசங்கர் தாக்கப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தங்களுக்கு முறையாகவும், காலதாமதம் இன்றியும் பணம் பட்டுவாடா செய்யக்கோரி நேற்று மாலை 5 மணியளவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன்பேரில் விவசாயிகள் அனைவரும் மாலை 5.20 மணிக்கு மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

Next Story