காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் - 1½ மாதமாக தவிப்பதாக புகார்
காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த 1½ மாதமாக குடிநீர் இன்றி தவிப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டி 40-வது வார்டில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை. மாநகராட்சி சார்பில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரையே பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 1½ மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படு கிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று குடைப்பாறைப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் சமாதானம் அடையாத மக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் போராடுவதாக கூறி சாலையோரத்தில் காலிக்குடங்களுடன் நின்றனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விரைவில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின்னர் பொதுமக்களுடன் பேசிய போலீசார், விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story