கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் வீரர் பலி ரெயிலில் அடிபட்டு 2 காளைகள் இறந்தன
கல்லக்குடியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் பரிதாபமாக இறந்தார். மேலும் ரெயிலில் அடிபட்டு 2 காளைகளும் இறந்தன.
கல்லக்குடி,
திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் உள்ள செல்லியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் அனுமதி பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து போட்டிக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது. அந்த பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்தனர். இதன்படி ராஜா டாக்கீஸ் அருகே அமைக்கப்பட்டிருந்த திடலில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதையொட்டி செல்லியம்மன் கோவிலுக்கு கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று சாமி கும்பிட்டுவிட்டு, ஊர்வலமாக திடலுக்கு வந்தனர். அங்கு காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் பாலாஜி தொடங்கி வைத்தார்.
முதலாவதாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து அரியலூர், பெரம்பலூர், ஆத்தூர், தம்மம்பட்டி, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், சேலம், துறையூர், ஜெயங்கொண்டம், சிதம்பரம், தொண்டமாந்துறை, விரகாலூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 720 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
வாடிவாசலில் மூக்கணாங்கயிறு வெட்டப்பட்டவுடன் காளைகள் சீறிப்பாய்ந்தும், துள்ளிக்குதித்தும் ஆக்ரோஷமாக வெளிவந்தன. அவற்றை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் திமிலை பிடிக்க முயன்ற வீரர்களை முட்டி தூக்கி வீசி, அந்தரத்தில் பறக்க விட்டன. சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் எல்லைக்கோட்டை நோக்கி விரைந்து சென்றன. சில காளைகளை வீரர்கள் திமிலை பிடித்து அடக்கினர்.
இதில் மாடுபிடி வீரர் ஆனந்திமேடு கிராமத்தை சேர்ந்த மருதை மகன் மணிகண்டனின்(வயது 22) மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் காளையின் கொம்பு குத்தியதில் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உள்பட 18 பேர் காயமடைந்தனர். இதில் சரடமங்கலம் பகுதியை சேர்ந்த பிச்சைப்பிள்ளை மகன் பாண்டியராஜ் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும், 4 பேர் லால்குடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறையை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவருக்கு சொந்தமான 2 காளைகளை அழைத்து வந்தனர். அந்த காளைகள் வாடிவாசலில் இருந்து அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன. அந்த காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் எல்லைக்கோட்டை கடந்து சென்றன. தொடர்ந்து ஓடிய காளைகள் கல்லக்குடியை அடுத்த பளிங்காநத்தம் ரெயில்வே பாலம் அருகே சென்றன. அந்த காளைகள் தண்டவாளத்தை கடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் அவற்றின் மீது மோதியது. இதில் அந்த காளைகள் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தன. காளைகளை தேடி வந்த வேளாங்கண்ணி மற்றும் அவருடன் வந்தவர்கள், ரெயில் மோதி 2 காளைகளும் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுது புலம்பினர். மேலும் பொதுமக்களும் அங்கு சென்று காளைகள் இறந்து கிடந்ததை பார்த்தனர்.
போட்டிக்கு முன்பாக காளைகள் மற்றும் வீரர்களை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் 737 காளைகளில் 17 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. வீரர்களில் ஒருவர் தகுதி நீக்கப்பட்டு 317 பேர், 4 பிரிவுகளாக போட்டியில் பங்கேற்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், துணை சூப்பிரண்டு ராஜசேகரன், துணை சூப்பிரண்டு(பயிற்சி) பிரவின் டோங்ரோ, தாசில்தார்(பொறுப்பு) ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் போட்டியை கண்காணித்தனர். லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை பால்துரை, ரமேஷ்குமார் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story