குழந்தை பெற்ற லேப் டெக்னீசியன் சாவு: தனியார் ஆஸ்பத்திரி கண்ணாடி உடைப்பு உறவினர்கள் சாலை மறியல்


குழந்தை பெற்ற லேப் டெக்னீசியன் சாவு: தனியார் ஆஸ்பத்திரி கண்ணாடி உடைப்பு உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 March 2019 3:30 AM IST (Updated: 2 March 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை பெற்ற லேப் டெக்னீசியன் இறந்ததால் தனியார் ஆஸ்பத்திரியின் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், 

சேலம் மஜ்ரா கொல்லப்பட்டி சாமிக்கடை பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், ஓமியோபதி டாக்டர். இவருடைய மனைவி துர்கா(வயது 24), லேப் டெக்னீசியன். இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த துர்காவை பிரசவத்திற்காக உறவினர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் பள்ளப்பட்டி 3 ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சுகப்பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் துர்காவிற்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக உறவினர்கள் அருகில் உள்ள வேறு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை துர்கா பரிதாபமாக இறந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், சரியான சிகிச்சை அளிக்காத காரணத்தால் தான் துர்கா இறந்ததாக கூறி குழந்தை பிறந்த ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். அப்போது சிலர் ஆஸ்பத்திரியின் ஜன்னல் கண்ணாடியை கைகளால் உடைத்தனர். இதையடுத்து உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர்கள், டாக்டர்கள் உரிய நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்காததால் துர்கா இறந்து விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

அதைதொடார்ந்து துர்காவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story