தூத்துக்குடி மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை ரூ.2½ லட்சம் சிக்கியது
தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டாத ரூ.2½ லட்சம் சிக்கியது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அமைந்து உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால் பல்வேறு அனுமதி பெறுவதற்கு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இந்த அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் மாவட்ட துணை கண்காணிப்பு அலுவலர் ராஜூ, போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் நேற்று காலை 11 மணியளவில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் என்ஜினீயர் லிவிங்ஸ்டன், பொது உதவியாளர் ரங்கநாதன் மற்றும் அலுவலர்கள் அங்கு இருந்தனர்.
இதைத்தொடர்ந்து அலுவலகத்தில் இருந்து பணியாளர்கள் யாரும் வெளியில் செல்லாத வகையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து சுற்றுச்சூழல் என்ஜினீயர் அறை உள்பட அலுவலகத்தின் அனைத்து பகுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, சுற்றுச்சூழல் என்ஜினீயர் மற்றும் பொது உதவியாளர் அறைகளில் இருந்து கணக்கில் காட்டப்படாத மொத்தம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் சிக்கியது. மேலும் சமீபத்தில் எந்த நிறுவனங்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டு உள்ளது, எந்த நிறுவனங்களுக்கு சான்று வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது? என்பது குறித்த விவரங்களையும் சேகரித்து விசாரணை நடத்தினர்.
இந்த சோதனை மாலை 4 மணி வரை நடந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story