குறைதீர்க்கும் நாள் கூட்டம்: விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-
விவசாயி மீசா மாரிமுத்து பேசுகையில், காவிரி, குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இத் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்குவதில்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே இத்திட்டத்தை பயன்படுத்தி வாக்குகளை பெறுவதற்கு அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன. எனவே, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.
ஜி.எஸ்.தனபதி கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிற்சாலையில் ஏதுமில்லை. விவசாயமும் கடந்த சில ஆண்டுகளாக பொய்த்துப் போவதால் இந்த மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள 6 ஆயிரம் குளம், கண்மாய்களை சிறப்பு திட்டத்தின் கீழ் சீரமைத்து விவசாயம் செய்வதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார்.
அத்தாணி ராமசாமி பேசுகையில், கல்லணை கால்வாயை சீரமைக்கும் பணியை உடனே மேற்கொள்ள வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை காக்க வைக்காமல் உடனே பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
தினகரசாமி பேசுகையில், நெல் பயிரில் கலை நீக்கும் கருவியான கோனோவீடர் கருவி வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட முந்திரி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர். பொன்னுசாமி பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை போதுமான அளவிற்கு பெய்யவில்லை. தற்போது கஜா புயலினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கலியராயன்விடுதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சாக்கு இல்லை எனக் கூறி விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப் படவில்லை என்றார்.
பவுன்ராஜ் பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகளை தெரிவிப்பதற்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே, அந்தந்த வட்டார அளவில் இரு வாரங்களுக்கு ஒருமுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்தினால் விவசாயிகளின் கோரிக்கைகளை தீர்ப்பதற்கு வசதியாக இருக்கும் என்றார். மேலும் செல்லத்துரை, காமராஜ் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் விவசாயிகளின் கேள்விகளுக்கு கலெக்டர் பதில் அளித்தார்.
Related Tags :
Next Story