4 வழி சாலைக்கு எதிராக நில உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் மண்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்
செம்பனார்கோவில் அருகே 4 வழி சாலைக்கு எதிராக நில உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் மண்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொறையாறு,
விழுப்புரம் முதல் நாகை வரை 4 வழி சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக நாகை மாவட்டம் கோபாலசமுத்திரம், புத்தூர், எருக்கூர், விளந்திடசமுத்திரம், சட்டநாதபுரம், தடாளன்கோவில், செங்கமேடு, காரைமேடு, காத்திருப்பு, நாங்கூர், செம்பதனிருப்பு, அல்லிவிளாகம், நடராஜபிள்ளை சாவடி, தலைச்சங்காடு, பூந்தாழை, மாமாகுடி, ஆக்கூர், பண்டாரவாடை, அன்னப்பன்பேட்டை, திருக்கடையூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், நிலம் கையகப்படுத்துவதற்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கக்கோரியும் நேற்று செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் முக்கூட்டில் நில உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மண்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது நிலம் கையகப்படுத்தும் போது சதுரடிக்கு ரூ.1000 வழங்க வேண்டும். நிலம் கையகப்படுத்தும்போது சேதம் ஏற்படும் மா, பலா, தென்னை, வாழை, புளியமரம் உள்ளிட்ட மரங்களுக்கு கூடுதலாக இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். நிலத்தை இழக்கும் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். புதிதாக அமைக்கப்படும் 4 வழி சாலையில் பாதிக்கப்பட்ட கிராம மக்களின் வாகனங்களுக்கு சுங்கவரி வசூல் செய்யக்கூடாது. நிலத்தை கையகப்படுத்தும்போது பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மாற்று தொழில் செய்ய வங்கியில் மானியத்துடன் கடனுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் கூறுகையில், நிலம் கையகப்படுத்துவதற்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கவில்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story