அரக்கோணத்தில் இருந்து சேலத்திற்கு மின்சார ரெயில் போக்குவரத்து எம்.பி., எம்.எல்.ஏ. பச்சை விளக்கு காட்டி தொடங்கி வைத்தனர்


அரக்கோணத்தில் இருந்து சேலத்திற்கு மின்சார ரெயில் போக்குவரத்து எம்.பி., எம்.எல்.ஏ. பச்சை விளக்கு காட்டி தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 2 March 2019 3:00 AM IST (Updated: 2 March 2019 4:53 AM IST)
t-max-icont-min-icon

சேலத்திலிருந்து காட்பாடி வரை இயக்கப்பட்ட மின்சார ரெயில் அரக்கோணம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரக்கோணத்திலிருந்து சேலத்திற்கு மின்சார ரெயில் போக்குவரத்தை கோ.அரி எம்.பி., சு.ரவி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அரக்கோணம், 

சேலத்திலிருந்து காட்பாடி வரை இயக்கப்பட்ட மின்சார ரெயில் அரக்கோணம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை சேலத்துக்கு ரெயில் போக்குவரத்து தொடக்க விழா அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அதிகாலை நடந்தது. இதில் கோ.அரி எம்.பி., வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சு.ரவி ஆகியோர் கலந்து கொண்டு பச்சை விளக்கை காண்பிக்கவே அதிகாலை 4.40 மணிக்கு ரெயில் சேலத்திற்கு புறப்பட்டு சென்றது.

தினமும் அதிகாலை 4.40 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பகல் 11.15 மணிக்கு சேலம் ரெயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் சேலத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் கே.பி.பாண்டுரங்கன், பொருளாளர் பத்மநாபன், பாரதீய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் பாபாஸ்பாபு, ரெயில் பயணிகள் சங்க தலைவர் நைனாமாசிலாமணி, பொதுச்செயலாளர் ஜெ.கே.ரகுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கோ.அரி எம்.பி.நிருபர்களிடம் கூறுகையில், “மங்களூரு மெயில், திருவனந்தபுரம் மெயில் ஆகிய ரெயில்களை அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்துவதற்கும், சென்னைக்கு கூடுதல் மின்சார ரெயில்கள் இயக்கவும் ரெயில்வே மந்திரி, ரெயில்வே பொது மேலாளரிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளேன். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

இதனிடையே அரக்கோணத்திலிருந்து புறப்பட்ட ரெயில் காலை 5.05 மணிக்கு சோளிங்கபுரம் ரெயில் நிலையத்தை அடைந்தது. அங்கு பொதுமக்கள், ரெயில் பயணிகள், ரெயில் உபயோகிப்பாளர் நலசங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்து என்ஜின் டிரைவர், ரெயில் நிலைய கார்டு, ஊழியர்கள் மற்றும் ரெயிலில் வந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கி ரெயிலுக்கு மாலை அணிவித்தனர். மேலும் என்ஜின் டிரைவர், கார்டு ஆகியோருக்கு சால்வை அணிவித்ததோடு ரெயிலுக்கு கற்பூரம் ஏற்றி பூசணிக்காய் உடைத்தனர். இந்த ரெயில் பராமரிப்பு பணிக்காக செல்வதால் வாரந்தோறும் இந்த ரெயில் இயங்காது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

அம்மூரில் உள்ள வாலாஜா ரோடு ரெயில் நிலையத்திற்கு இந்த ரெயில் வந்தபோது வாலாஜா ரோடு ரெயில் பயணிகள் நலச்சங்க கவுரவ செயலாளர் உமாபதி, செயலாளர் செங்கல்வராயன்,இணை செயலாளர் வசந்தகுமார், தலைவர் சண்முகராஜன் உள்பட நிர்வாகிகள் ரெயிலை வரவேற்று, டிரைவர் உள்பட பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். மேலும் ரெயில்வே நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

Next Story