தஞ்சை மாவட்டத்தில் 30 ஆயிரத்து 30 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்


தஞ்சை மாவட்டத்தில் 30 ஆயிரத்து 30 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 1 March 2019 11:24 PM GMT (Updated: 1 March 2019 11:24 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் 30 ஆயிரத்து 30 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று தமிழ் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 30 ஆயிரத்து 30 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 105 தேர்வு மையங்களில் 13 ஆயிரத்து 130 மாணவர்களும், 16 ஆயிரத்து 426 மாணவிகளும் என மொத்தம் 29 ஆயிரத்து 556 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மேலும் தனித்தேர்வர்கள் 2 மையங்களில் 474 பேர் எழுதினர்.

இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 78 பேரும் அடங்குவர். இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக தரைதளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன. உடல் ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேச முடியாதவர்கள் மற்றும் மனவளர்சசி குன்றியவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. பார்வையற்றவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.

தேர்வு பணியில் 2 ஆயிரத்து 668 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களை கண்காணிக்க பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும்படையில் 224 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது முதன்மைக்கல்வி அலுவலர் சாந்தா மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். தேர்வு எழுத செல்வதற்கு முன்பு மாணவ, மாணவிகள் கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும் ஆசி பெற்று கொண்டு தேர்வு எழுத சென்றனர். மாணவர்கள் பெல்ட் அணிந்து தேர்வுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.


Next Story