திருமணத்தில் கிடைத்த ரூ.2 லட்சம் மொய் பணம் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டது
மகளின் திருமணத்தில் கிடைத்த ரூ.2 லட்சம் மொய் பணத்தை அவரது தந்தை ராணுவ வீரர்கள் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் வசாயில் நடந்துள்ளது.
வசாய்,
பால்கர் மாவட்டம் தகானு, சராவ்லி பகுதியை சேர்ந்தவர் அசோக் ராஜ்புத்(வயது54). தகானுவில் இயங்கி வரும் குளிர்பான நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறாா். அசோக் ராஜ்புத்தின் மூத்த மகள் பாவ்னாவின் திருமணம் கடந்த மாதம் 24-ந்தேதி நிச்சயிக்கப்பட்டு இருந்தது. முன்னதாக கடந்த மாதம் 14-ந்தேதி காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அசோக் ராஜ்புத்தை மிகவும் பாதித்தது. ஏற்கனவே உறவினர்களுக்கு பத்திரிகை கொடுத்துவிட்டதால் அவரால் மகள் திருமண ஏற்பாடுகளை நிறுத்த முடியவில்லை. எனவே அவர் திருமணத்தில் கிடைக்கும் மொய் பணம் மற்றும் அன்பளிப்பை ராணுவ வீரர்கள் நிவாரண நிதிக்கு கொடுக்க முன்வந்தார்.
இது குறித்து அவர் மணமகன் வீட்டிலும் பேசினார். அவர்களும் அசோக் ராஜ்புத்தின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து மகள் திருமணத்தில் பிரிந்த மொய் பணம் ரூ.2 லட்சத்தை அசோக் ராஜ்புத், தகானு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் நார்னவாரேயிடம் ஒப்படைத்தார். இது குறித்து அசோக் ராஜ்புத் கூறியதாவது:-
எனது மகள் திருமணத்தில் மொய் பணமாக ரூ.2 லட்சம் கிடைத்தது. இந்த பணத்தை ராணுவ வீரர்கள் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளேன். ராணுவத்தால் தான் நாம் பத்திரமாக உள்ளோம்.
ராணுவ வீரர்கள் உயிரை கொடுத்து எல்லையை பாதுகாப்பதால் தான் நாம் இங்கு திருமணத்தையும், பண்டிகைகளையும் கொண்டாட முடிகிறது. ராணுவ வீரர்கள் தேசிய கடமையை செய்கின்றனர். நாமும் அவர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story