நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியலை ஓரிரு நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் அரசியல் கட்சியினருக்கு உத்தரவு


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியலை ஓரிரு நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் அரசியல் கட்சியினருக்கு உத்தரவு
x
தினத்தந்தி 3 March 2019 4:15 AM IST (Updated: 2 March 2019 10:36 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் முகவர்களாக பணியாற்றுவோர் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஓரிரு நாட்களுக்குள் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில் ஒப்படைக்க வேண்டும் என கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தெரிவித்தார்.

திருவண்ணாமலை,

நாடாளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளை பிரித்தல் மற்றும் மாற்றியமைத்தல் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 372 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில், 1,400-க்கும் அதிகமான வாக்குகள் கொண்ட வாக்குச்சாவடிகள் தற்போது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலையை அடுத்த சுக்கரதாம்மடை கிராமம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மற்றும் கலசப்பாக்கத்தை அடுத்த வேடகொல்லைமேடு அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி வீதம் 2 வாக்குச்சாடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 374 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையும் 1,271-ல் இருந்து 1,273-ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஏற்கனவே செயல்பட்டு வந்த 79 வாக்குச்சாவடிகள் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்ததால் அதே பள்ளியில் புதிய கட்டிடத்தில் வாக்குச்சாவடிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு உள்ளதால் 74 வாக்குப் பதிவு மையங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளது. ஒரு பகுதியில் உள்ளவர்கள் மற்றொரு பகுதிக்கு வாக்களிக்க செல்லும்போது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசியல் கட்சிகள் தெரிவித்தால், முன்கூட்டியே கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி பேசுகையில், “அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குச்சாவடி மைய முகவர்கள் பட்டியலை ஓரிரு நாட்களில், தேர்தல் பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்த தேர்தலில் புதிய செல்போன் செயலி பயன்படுத்த உள்ளது. அதில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல் மற்றும் விதிகளை மீறி பிரசாரம் செய்தல் போன்ற செயல்களை செல்போனில் படம் எடுத்து, புதிய செல்போன் செயலி மூலம் அனுப்பலாம். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொய் புகார்களுக்கும் இடம் இருக்காது” என்றார்.

இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி உள்பட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story