பொதுமக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும் அலுவலர்களுக்கு, மாவட்ட கண்காணிப்பு அதிகாரி உத்தரவு
பொதுமக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு, வேலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுனில்பாலிவால் உத்தரவிட்டார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் அனைத்து அரசுத்துறைகளின் சார்பாக செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் வேலூர் சுற்றுலா மாளிகையில் நடந்தது. வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுனில்பாலிவால் தலைமை தாங்கினார். கலெக்டர் ராமன் முன்னிலை வகித்தார்.
இதில், வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி நகராட்சிகளின் நிர்வாகம் மற்றும் பேரூராட்சித்துறை, தமிழ்நாடு குடிநீர் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், மகளிர் திட்டம் ஆகிய துறைகளின் சார்பாக செய்யப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்தும், மாவட்டத்தில் காணப்படும் தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் மின்சார வசதிகள் குறித்தும் அந்தந்த துறை அதிகாரிகளிடம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுனில்பாலிவால் கேட்டறிந்தார்.
பின்னர் அவர், கோடைக்காலத்தில் ஏற்படும் குடிநீர் மற்றும் மின்சார பிரச்சினைகள் மீது தனி கவனம் செலுத்தி மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுனில்பாலிவால், வேலூர் வேளாண்மை விற்பனை சங்கத்தில் வேளாண்மைத்துறையின் சார்பாக காட்பாடி, வேலூர், கே.வி.குப்பம் தாலுகாக்களை சேர்ந்த 3 உழவர் உற்பத்தி குழுக்களுக்கு நவீன பண்ணை எந்திரங்கள், 6 டிராக்டர் மற்றும் 2 ரோட்டவேட்டர்களையும் விவசாயிகளுக்கு வழங்கினார்.
பின்னர் அவர் காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் மூலம் அம்ரூத் திட்டத்தில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை பார்வையிட்டு, அப்பணி நிறைவடையும் நாள் மற்றும் அதன் பயன்பெறும் மக்கள் குறித்தும், அப்பகுதியில் உள்ள தண்ணீர் பிரச்சினைகள் குறித்தும் செயற் பொறியாளர்களிடம் கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து சுனில்பாலிவால் காட்பாடி கோபாலபுரம் பகுதியில் அம்ரூத் திட்டத்தில் மாநகராட்சி மூலமாக கட்டப்பட்டுள்ள பூங்காவை பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் பூங்கா நாள் தோறும் திறக்கப்படுகிறதா? மின்விளக்குகள் மற்றும் பூங்கா பராமரிப்பு குறித்தும் கேட்டார். இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பெரியசாமி, மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயகுமார், மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் சுந்தரம், வேளாண்மை இணை இயக்குனர் சுப்புலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story