ஓசூர் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.4.96 லட்சம் பறிமுதல்


ஓசூர் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.4.96 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 3 March 2019 4:30 AM IST (Updated: 2 March 2019 11:48 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் 2 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 96 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய பொதுமேலாளராக பணியாற்றி வருபவர் தேவராஜ். இவர் ஓசூர் பஸ் நிலையம் எதிரில் மின் மற்றும் மின்னணு தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு தொழில் வணிகத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

இவர், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மானியம் வழங்க, 10 சதவீதம் லஞ்சம் கேட்பதாக பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு, ஓசூரில் உள்ள தமிழ்நாடு அரசு தொழில் வணிகத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனை செய்தனர்.

அப்போது அந்த அலுவலகத்தில் கணக்கில் வராத, 3 லட்சத்து, 10 ஆயிரத்து, 350 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தேவராஜிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போல ஓசூர் எம்.ஜி. ரோட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், புரோக்கர்கள் மூலம் லஞ்சம் வழங்கப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கணக்கில் வராத, ஒரு லட்சத்து, 86 ஆயிரத்து, 370 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சார் பதிவாளர் சாய்கீதாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story